ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியான முறையில் சுமூகத் தீர்வு காண வேண்டும், இருதரப்பும் பாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை, நம்மால் அமைதியான வாழ்க்கை வாழ முடியும் என்று நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் ஆர்வலர் மலாலா யூசுப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த அரசமைப்புச்சட்டம் 370 பிரிவை மத்திய அரசு திரும்பப்பெற்று உத்தரவிட்டு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றது. மாநிலத்தையும் இரண்டாகப்பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீர் என மாற்றியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தூதர்களை திருப்பி அனுப்பி, இரு நாட்டு வர்த்தக உறவையும் துண்டித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு வென்றவருமான சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் ட்விட்டரில் இருநாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ” நான் சிறு குழந்தையாக இருந்தில் இருந்து காஷ்மீர் மக்கள் பிரச்சினையுடனேயே வாழ்கிறார்கள்.

என் தந்தை மற்றும் தாய், என் தாத்தா,பாட்டி இளமையாக இருந்தபோதில் இருந்து காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது. தெற்கு ஆசியா எனது இல்லம். இந்த இல்லத்தில் காஷ்மீர் மக்கள் உட்பட 180 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதனால் காஷ்மீர் மக்களைப் பற்றி நான் அக்கறை கொள்கிறேன்

ஆசியப்பிராந்தியம் என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், மதங்கள், மொழிகள், உணவுகள், வழிபாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. நம்மால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொண்டும், வேதனைப்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நான் பெரும்பாலும் காஷ்மீர் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்துதான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். ஏனென்றால், இவர்கள்தான் வன்முறையாலும், சண்டையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எந்தவிதமான ஒப்பந்தம் வேண்டுமானாலும் இருக்கலாம், என்னுடைய நோக்கம், அனைத்தும் 70 ஆண்டுகளாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் பதிவிட்டுள்ளார்.