அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கை கட்டுப்பாடுகளால், ஹெச் – 1பி விசாக்கள் மறுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு என அமெரிக்க ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை நடத்திய ஆய்வில், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பிரபலமான ஹெச் -1 பி விசாக்கள் மறுக்கப்படும் விகிதம் 2015 ல் வெறும் 6 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 24 சதவீதமாக இது அதிகரித்துள்ளது.

2017ம் ஆண்டு அமெரிக்காவை சிறந்ததாக்குவோம் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு, ”பை அமெரிக்கன் அண்ட் ஹையர் அமெரிக்கன்” என்ற உத்தரவை அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.

விண்ணப்பம்

இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கவும், வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உயர் திறமைசாலிகளுக்கு வழங்கப்படும் குடிவரவு திட்டத்தை சீர்திருத்துவதற்கு அவர் உறுதியளித்தார்.

அப்போதிலிருந்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஹெச் -1 பி விசாக்களின் நிராகரித்தும் அல்லது ஏற்பு விகிதங்களை அறிவிக்க மறுத்தும், தாமதித்தும் வந்தது.

ஹெச் 1 பி விசா என்பது புலம் பெயர்ந்தோர் அல்லாதவர்களுக்கான விசா ஆகும், உயரிய திறமையுடைய வெளிநாட்டினரை அமெரிக்க நிறுவனங்கள் ஹெச் -1பி விசா மூலம் அமெரிக்காவில் உள்ள நிறுவங்களில் பணியில் அமர்த்தலாம்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹெச் -1பி விசாவை நம்பியுள்ளன.

அதிபர் டிரம்ப்

முக்கியமான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஹெச் -1 பி விசாக்களை மறுத்துவிடும் விகிதம் மிக அதிகமாக உள்ளது என்பதை இந்த ஆய்வு பிரதிபலிக்கிறது.

இதனால் இந்திய நிறுவனங்கள் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் தேவையற்ற முறையில் குறிவைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எடுத்துக்காட்டாக, 2015ம் ஆண்டு அமேசான், மைக்ரோசாஃப்ட், இன்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கான ஹெச் -1 பி விசா மறுக்கப்படும் விகிதம் ஒரு சதவீதமாக இருந்தது.

ஆனால் 2019ம் ஆண்டு நிலவரப்படி அமேசான் நிறுவனத்தின் ஹெச் – 1பி விசா மறுக்கப்படும் சதவீதம் மட்டுமே 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கன் சென்டர்

மைக்ரோசாஃப்ட் 8 சதவீதம் , இன்டெல் 7 சதவீதம், கூகுள் 3 சதவீதம் என்ற அளவில் ஹெச்-1பி விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் விசா மறுக்கப்படும் விகிதம் 2 சதவீதமாக நீடிக்கிறது.

இதே காலகட்டத்தில், டெக் மஹிந்திராவிற்கான ஹெச் – 1பி விசா மறுக்கப்படும் சதவீதம் 4 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் ஹெச் – 1பி விசா மறுக்கப்படும் சதவீதம் 6 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும், விப்ரோ 7ல் இருந்து 53 சதவீதமாகவும், இன்ஃபோசிஸ் 2ல் இருந்து 45 சதவீதமாகவும் எச் – 1பி விசா மறுப்பு அதிகரித்துள்ளது, என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்ஸென்ச்சர், காப்ஜெமினி உட்பட பிற அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்முறை அல்லது தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் குறைந்தது 12 நிறுவனங்கள், 2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஹெச் – 1பி விசா மறுக்கப்படும் சதவீதங்களைக் எதிர்கொண்டுள்ளன.

டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவங்களில் ஏற்கனவே பணிபுரியும் இந்திய ஊழியர்களின் ஹெச் -1பி விசா கால நீட்டிப்பு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த கால நீட்டிப்பு மனுக்களின் நிராகரிப்பு சதவீதமும் கடந்த 2015-ல் இருந்து 2019ம் ஆண்டு வரை பல மடங்கு அதிகரித்துள்ளது என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here