மருந்து அட்டைகளில் க்யூ-ஆர் குறியீடு [QR code] அவசியம்

0
103


மருந்துகளை உற்பத்தி செய்தாலோ அல்லது இறக்குமதி செய்தாலோ, அந்த அட்டைகளின் மீது க்யூ-ஆர் கோடு எனப்படும் பிரத்யேகக் குறியீட்டை அச்சிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வரைவு அறிவிக்கையை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதுதொடர்பான ஆட்சேபங்களோ அல்லது கருத்துகளோ இருந்தால் அவற்றை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் போலி மருந்துகள் மற்றும் கலப்பட மருந்துகளைத் தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 4,200 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள், காச நோய், எய்ட்ஸ் தடுப்பு மையங்கள், ராணுவ மருந்தகங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான மருந்துகளை அந்த உற்பத்தி நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. 

அதேபோன்று, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் பொது மருத்துவமனைப் பயன்பாட்டுக்காகவும், சுகாதாரத் திட்டங்களுக்காகவும் ஒப்பந்த புள்ளிகள் மூலமாக மருந்துகளை கொள்முதல் செய்து வருகின்றன.

மத்திய அரசு சார்பில் ஆண்டொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழக சுகாதாரத் துறையானது ரூ.  650 கோடி மதிப்பிலான மருந்துகளை வாங்குகிறது.

இதைத் தவிர தனியார் மருத்துவமனை, மருந்தகங்களிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதற்கான ஒப்பந்த விதிகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. உரிய உரிமமும், தரமும் இல்லாத எந்த மருந்தையும் மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. இருந்தபோதிலும், காலாவதியான மருந்துகளில் புதிய தகவல்கள் அச்சிடப்படுவதற்கும், போலி மருந்துகள் சந்தையில் ஊடுருவுவதற்கும் சில வாய்ப்புகள் இருந்து வருகின்றன.

அதனைத் தவிர்க்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, மூலக்கூறு மருந்து பாக்கெட்டுகளின் மேல் பிரத்யேக குறியீடுகளை அச்சிட வேண்டும் என்று வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேதி, பிரத்யேக குறியீட்டு எண், காலாவதியாகும் தேதி, வர்த்தகப் பெயர், மூலக்கூறு பெயர், எங்கு தயாரிக்கப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.