எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடப்புகல்வியாண்டில் (2018-19) மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 10) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது. படிப்பில் சேர விண்ணப்பங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11 -ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ்.அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பப் படிவம், தகவல் குறிப்பேடு ஆகியவற்றை “THE SECRETARY, SELECTION COMMITTE, KILPAUK, CHENNAI-10″ என்ற பெயரில் தொகைக்கேற்ப (ரூ.500/- அல்லது ரூ.1,000/-) வரைவோலையாக தொடர்புடைய மருத்துவக் கல்லூரியில் அளித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000/-.

விண்ணப்பம் கோரும் கடிதத்தையும் வரைவோலையுடன் இணைத்து அளிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ.100-க்கு வரைவோலை எடுத்து பொது விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்