ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் பலராலும் உபயோகிக்கப் படும் முக்கிய செயலியாக இருப்பது பேடிஎம். இந்தச் செயலியில் அதிகளவில் மக்கள் தங்களின் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்தச் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் ரீசார்ஜ், மின்சார ரசீது, டிடிஎச் கட்டணம் போன்ற பல சேவைகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆகவே இது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில்பேடிஎம் தற்போது மருத்துவ வசதிகளுக்கு மட்டும் தனியாக ஒரு புதிய செயலியை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன் படி மருத்துவர்களுக்கு நோயாளிகள் செலுத்தும் கட்டணத்தை இந்தப் புதிய செயலி மூலம் செய்து கொள்ளலாம். அத்துடன் மருத்துவர்களிடம் நோயாளிகள் முன்பதிவு செய்ய வசதியும் இந்தச் செயலியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் தங்களின் மருத்துவமனைக்கு வாங்கும் மருந்துகளுக்கு இச் செயலி மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே பேடிஎம் நிறுவனம் கல்வித்துறையில் கட்டணம் செலுத்தும் வசதியை அறிவித்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தச் சூழலில் பேடிஎம் தற்போது மருத்துவதுறையில் தனது கால் தடத்தைப் பதிக்கவுள்ளது. ஒரு மாததிற்கு பேடிஎம் செயலியில் 800-900 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)