அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் இந்தியாவில் விற்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கு காப்புரிமைத் தொகைக்கு உரிமை கொண்டாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு மான்சான்டோ, பேயர் (Bayer), டுபான்ட் பயோனீர் (Dupont Pioneer), சின்ஜென்தா (Syngenta) போன்ற நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது . இந்நிறுவனங்கள் இந்தியாவில் (GM) மரபணு பயிர்களின் காப்புரிமைகளை இழக்க நேரிடும் என்று கவலை கொண்டிருந்தது.

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க நிறுவமான மான்சான்டோ மரபணு பருத்தி விதைகளுக்கு காப்புரிமை கோர முடியாது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் காப்புரிமை கோரலாம் என்று கூறியுள்ளது.

இதன் விளைவாக அயல்நாட்டு வேளாண் நிறுவனங்களான மான்சான்டோ, பேயர், டுபாண்ட் பயனீர் மற்றும் சின்ஜெண்ட்டா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் விற்கப்படும் தங்களது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கான காப்புரிமையைக் கோரலாம்.

“இது மிகவும் நல்ல நகர்வு, காப்புரிமை பிரச்சினை நிலுவையில் இருந்ததால் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளிப்பதை நிறுத்தி விட்டது. காரணம் காப்புரிமை விதிகள்” என்று ஷேட்காரி சங்கட்னா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவர் அஜித் நார்தே தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு புதிய வேளாண் தொழில்நுட்பம் தேவை என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உயர் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினால்தான் இந்திய விவசாயிகள் உலக அரங்கில் சந்தைப் போட்டியில் நிற்க முடியும் என்று நார்தே கருதுகிறார்.

உள்நாட்டு விதைகள் நிறுவனமான நுழிவீடு விதைகள் லிமிடெட் நிறுவனம் (Nuziveedu Seeds Ltd ) இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் மான்சான்டோ உரிமை கொண்டாட முடியாது என்று வாதிட்டு மனு செய்ததையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் மான்சான்டோவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. 2015-ஆம் ஆண்டு மான்சான்டோ நிறுவனம் நுழிவீடு லிட் நிறுவனத்துடனான தன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.

இந்திய பருத்தி உற்பத்தியில் 90% சதவீதம் மரபணு தொழில்நுட்பமே ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here