உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை, ஆனால்,முடிவில் பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

விரைவில் வரும் மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சிகளின் தலைவர்களாக மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில், துபாயில் 2 நாட்கள் பயணத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது –

அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இரு கட்சிகளின் தலைவர்களும், அவர்களுக்கு விருப்பமான முடிவை அவர்கள் எடுக்க உரிமை இருக்கிறது. கூட்டணி அமைக்கவும் உரிமை இருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி உ.பி. மக்களிடம் எங்களால் சிறப்பான முறையில் சென்று வாக்குக் கேட்போம், எங்கள் சித்தாந்தங்களை மக்களுக்கு தெரிவித்து, எங்கள் முழு வலிமையையும் வெளிப்படுத்தித் தேர்தலில் போட்டியிடுவோம்.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி ஆகியவை அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்துள்ளன. எங்களைப் பொருத்தவரை இனிமேல், உ.பி.யில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக கவனம் செலுத்துவோம், முழு வலிமையுடன் போரிடுவோம்.

எங்களால் முடிந்தவரை மக்களை எங்கள் பக்கம் திரட்டி, வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் சில தொகுதிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகளையும் அளிப்போம்.

மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தாது. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை, ஆனால், முடிவில் பாஜக ஆட்சிக்கு வராது.

காங்கிரஸ் கட்சியைக் குறித்து அவர்கள் இருவரும் சில தவறுகளை சுட்டிக்காட்டிப் பேசினார்கள், இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், தவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் பணியாற்றுகிறோம். எங்களுடைய கட்சி கூட்டணியில் இருந்து போட்டியிடுகிறதா அல்லது தனியாக போட்டியிடுகிறதா என்பதல்ல விஷயம், முடிவு ஒரேமாதிரியாக இருக்கும், அதாவது, பாஜக வெற்றி பெறாது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here