மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதும், விழா மேடைகளில் இணைந்து கலை நிகழ்ச்சியில் பங்குபெறுவதும் சாதாரணம். அவர்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாவதில் ஆச்சரியமில்லை. இங்குள்ள விஜய் – அஜித் ரசிகர்களைப் போல் மம்முட்டி – மோகன்லால் ரசிகர்கள் அடித்துக் கொள்வதில்லை என்றாலும் போட்டி உண்டு. மம்முக்கா படம்தான் ஹிட் என்றும் லாலேட்டன் படம்தான் வசூலில் டாப் எனவும் இணையத்தில் மோதிக் கொள்வார்கள்.

இன்று மம்முட்டி, மோகன்லால் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். மம்முட்டி நடித்திருக்கும் மதுர ராஜா படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. அதேபோல் மோகன்லாலின் லூசிபர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. யூடியூபை தெறிக்கவிட இரு நடிகர்களின் ரசிகர்களும் தயார்.

மதுர ராஜா படத்தை வைசாக் இயக்கியுள்ளார். எங்கோ கேள்விப்பட்ட பெயராக தெரிகிறதா? இவர்தான் வசூல் சாதனை படைத்த மோகன்லாலின் புலிமுருகனை இயக்கியவர். அதற்கு முன் மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா என்ற படத்தை இயக்கியுள்ளார். அதுதான் வைசாக்கின் முதல் படம். தமிழின் மோசமான கமர்ஷியல் படத்தைவிட மோசமான கமர்ஷியல் படம் போக்கிரி ராஜா. ஆச்சரியம் என்னவென்றால் படம் ஹிட். மம்முட்டி, பிருத்விராஜ், சித்திக், ஸ்ரேயா படத்தில் நடித்திருந்தனர். சின்ன வயதில் வீட்டைவிட்டு வெளியே போய் ரவுடியானவர் மம்முட்டி. அவருக்கு சிட்டி கமிஷனர் சித்திக் தனது மகள் ஸ்ரேயாவை காதலிக்கும் பிருத்விராஜை தட்டி வைக்க கொட்டேஷன் கொடுக்கிறார். மம்முட்டியும், பிருத்விராஜும் சந்திக்கும் இடத்தில் ஒரு ட்விஸ்ட். ஓடிப்போன மம்முட்டியின் தம்பிதான் பிருத்விராஜ். அப்புறமென்ன. அண்ணன் எப்படி தம்பியின் காதலை சேர்த்து வைத்தார் என்பது கதை. இதன் இரண்டாம் பாகமாகத்தான் மதுர ராஜா தயாராகியிருக்கிறது. ஆனால், போக்கிரி ராஜாவில் மம்முட்டியின் தம்பியாக நடித்த பிருத்விராஜ் மதுர ராஜாவில் இருக்கிறாரா என்றால் இல்லை. அவர் எங்கே போனார்?

பிருத்விராஜ் இப்போது எதிர்முகாமில், அதாவது மோகன்லால் பக்கம் இருக்கிறார். ஆம். மோகன்லாலின் லூசிபர் படத்தை இயக்கியிருப்பது பிருத்விராஜ். இது இயக்குநராக அவருக்கு முதல் படம். முரளி கோபி திரைக்கதை எழுதியிருக்கும் லூசிபரை ஆசிர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்க கேரளாவே ஆவல் கொண்டிருக்கிறது.

டீஸரும், ட்ரெய்லரும் ஒரே நாளில் வெளியானாலும் இரு படங்களும் வெவ்வேறு தேதிகளில்தான் திரைக்கு வருகின்றன. லூசிபர் மார்ச் 28, மதுர ராஜா ஏப்ரல் 12.

இரண்டில் எது ஹிட்டாகும் என்று மம்முக்கா ரசிகர்களும் லாலேட்டன் ரசிகர்களும் சவால்விட்டு காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here