மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தும் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம், கொல்கத்தாவில் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக ”ஒற்றுமை இந்தியா மாநாடு” என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக நடைபெறும் இந்த கூட்டம் மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது.

இக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி.தேவெகௌடா, அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி,லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் உட்பட சுமார் 25 அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

மேலும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல் மந்திரி என்.சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பொதுக்கூட்ட மாநாடு நடைபெறும் பிரிகேட் பரேட் மைதானத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் மாநாடாக இந்த கூட்டம் அமையும் எனவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர். 7 லட்சம் பேர் கூடலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலையில் இருந்து பொதுமக்கள் வருகை தர துவங்கியுள்ளனர்.

முன்னதாக, இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கட்சித்தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து நேற்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here