மன அழுத்தத்தைப் போக்க காவலர்கள் என்ன செய்ய வேண்டும்?

0
635

கொலை, கொள்ளை, திருட்டு, தற்கொலை இப்படி ஏகப்பட்ட மக்கள் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் காவல்துறையினர். போதாததற்கு மேலதிகாரிகளின் ஆணைகளை சிரமமேற்று செய்தல், அதிகாரம், அரசியல் என காவல்துறைக்குள்ளேயே நடக்கும் பிரச்சனைகளையும் வேலைக்கு பங்கம் வராத அளவிற்கு பார்த்து பார்த்து எதிர் கொள்ள வேண்டும். பெண்கள் என்றால் இவை எல்லாவற்றோடும் சேர்த்து பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய பல சிக்கல்களை கையாள வேண்டும்.

இது தவிர, தமிழ்நாடு முழுக்க ஆண்டுக்கு ஆயிரம் காவலர்கள் ஓய்வு பெற்று செல்கின்றனர். அதற்கு பதிலாக புதிய காவலர்கள் நியமிக்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 21 ஆயிரம் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

அதே போல, 70 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரத்தில் 136 காவல்நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருபதாயிரம் காவலர்கள் பணிபுரிகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 350 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் காவலர்கள் பணியில் உள்ளதால், பணிச் சுமை அதிகமாக உள்ளது என்றும் இதனால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்று மன நல மருத்துவர் மினி ராவ் கூறும் ஆலோசனைகள்:

தியானம்

அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் வெறும் அய்ந்து நிமிடத்தில் நம்மை அமைதிப்படுத்துவது தியானம். எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த இடத்தில் உட்கார்ந்தோ படுத்தோ அய்ந்து வினாடிகள் மூச்சை இழுத்துவிட வேண்டும். 10 வினாடிகள் மூச்சை வெளியே விடவேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும். இது போல் வெறும் அய்ந்து நிமிடங்கள் செய்தால் போதும். மன இறுக்கம் குறையும்.

o-MEDITATION-facebook

உடற்பயிற்சி

தங்களுக்கு எந்த உடற்பயிற்சி பிடிக்கிறதோ அல்லது எது முடியுமோ அந்த உடற்பயிற்சியை 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறி உடம்பையும் மனதையும் இலகுவாக வைத்திருக்கும்.

7618217854_fdf0fac537_c

உணவு

எந்தப் பணியில் இருந்தாலும் உணவு பழக்கத்தை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் நல்ல ஆரோக்கியமான திடமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் மிகக் குறைவாக நல்ல உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக, ஒரு நாள் முழுக்க சமச் சீரான உணவை எடுத்துக் கொள்வது மிக அவசியம். கூடவே பசிக்கும் போது சாப்பிட வேண்டும். காவல்துறையினர் புரோட்டின் உணவுகளை நன்றாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

fruit_veg

பொழுது போக்கு

குடும்பத்தோடு நேரம் செலவிடுவது மிக அவசியம். அதுதான் நம் மனதை மேலும் இலகுவாக்கவும், மன இறுக்கத்தை போக்கவும் கூடிய மருந்து. குடும்பத்தோடு பூங்காக்கள், கடற்கரை, சினிமா என்று எது பிடிக்குமோ, எங்கு செல்ல முடியுமோ அங்கு சென்று பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும்.

உடன் இருப்போரின் கவனத்திற்கு….

இரண்டு வாரத்திற்கு மேல் ஒருவர் தனியாக இருப்பது, யாருடன் பேசாமல் இருப்பது, தன்னிடம் உள்ள பிடித்த பொருட்களை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவது, எதன் மீதும் ஆசை இல்லாமல் இருப்பது, அழுவது, கோபமாக இருப்பது என வழக்கத்திற்கு மாறாக இருந்தால், உடனடியாக உடன் இருப்பவர்கள் அவரை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். ஏனென்றால் இவை அனைத்தும் தற்கொலை முயற்சிக்கான அறிகுறிகள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்