மனுஷிக்கும் வேலு சரவணனுக்கும் வாழ்த்துகள்

Manushi and Velu Saravanan were given Yuva Puraskar Award by Sahitya Akademi

0
973
கவிதாயினி மனுஷி

கவிஞர் மனுஷிக்கும் குழந்தைகளுக்கான நாடகம் படைக்கும் கலைஞர் வேலு சரவணனுக்கும் சாகித்ய அகாதெமி வழங்கும் யுவ சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. இருவருக்கும் இப்போது டாட் காமின் வாழ்த்துகள்.

வேலு சரவணனின் குழந்தைகள் நாடகம் ஒன்றை இங்கே பாருங்கள்.

குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன்
குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன்

மனுஷியின் கொஞ்சம் கவிதைகளை இங்கே படியுங்கள்:
கடவுளின் நகரத்தில்
தனித்து அழுவதற்கு
ஓரிடமில்லை மாயா.
இப்போது அழ வேண்டும்.

உனது நினைவுகளைச்
சிறகென சுமந்து பறக்கும்
பறவை நான்.
எனது வனமெங்கும்
உதிர்ந்து கிடக்கின்றன
உனது சொற்கள்.
திசையெங்கும்
பரவிக் கிடைக்கிறது
உனது குரல்.
தனித்திருப்பதாய் புலம்பாதே.
அங்கே பார்.
மேகங்கள் அழுது தீர்க்கின்றன.

உனது ஞாபகங்களைக்
கிள்ளி எறிந்தேன்.
குட்டிக் குட்டி நட்சத்திரங்களாய்
கண்சிமிட்டுகின்றன
இந்நெடிய இரவெங்கும்.

கோபம் கொள்வதற்கான
நியாயமான காரணங்கள் இருக்கலாம்
உங்களிடம்.
நீங்கள் கோபப்படலாம்.
முரண்படுவதற்கான
வலுவான காரணங்கள் இருக்கலாம்
உங்களிடம்.
நீங்கள் முரண்படலாம்.
என்மீது புகார்களைச் சுமத்த
போதிய ஆதாரங்கள் இருக்கலாம்.
நீங்கள் குற்றம் சொல்லலாம்.
ஒரு வார்த்தையோ
ஒரு மௌனமோ
ஒரு புன்னகையோ
சிறு கையசைப்போ
ஏதோ ஒன்றோ உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
ஒட்டுமொத்தமாய் புறக்கணித்து விட்டதாக
உங்கள் அடையாளத்தைக்
களவாடிச் சென்றுவிட்டதாக
நீங்கள் கூச்சலிடலாம்.
நேசிப்பதற்கான காரணங்களைத் தேடித்தான்
போய்க் கொண்டிருக்கிறேன்
இந்நெடிய வாழ்வெங்கும்…


திடீரென அங்கே
உன்னைக் கண்டபோது
இறந்தவர்களைக் கனவில் கண்டது போல திடுக்கிட்டுப் போனேன் மாயா.
நீ வரப்போவதை முன்னறிவிக்க ஒரு வார்த்தையும் இல்லாமல் போனது
நம் காலத்தின் மாபெரும் துயரம் தானே.
உன் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சியபோதும்
நீ மௌனமாகவே விலகிப் போகிறாய்.
சேர்ந்திருப்பதற்கு வேண்டாம்
விலகிப் போவதற்கும்
பிரிந்து போவதற்கும்
ஒரு காரணமுமா இல்லாது போனது?
கோடைக்காலத்தின் ஒற்றை மழைத்துளி என ஒரேயொரு வார்த்தைக்காக
உன் வழித்தடமெங்கும்
பின் தொடர்கிறேன்.
நேசத்தின் வாசனை ஏதுமற்று
நீ
யாரோவாகக் கடந்து போகையில்
எனக்கே நான் அந்நியமாகிப் போனதை
எங்கு போய் முறையிட?
அன்றொரு நாள்
நாம் சம்பிரதாயமாக அணைத்துக் கொண்டபோது
நமது மனங்களுக்கிடையில்
வளர்ந்திருந்த பெருஞ்சுவரொன்றை உடைத்துவிட மாட்டேனா என
ஏக்கத்துடன் முத்தமிட்டேன்.
எச்சிலைப் போல துடைத்தழித்தாய்.
மாயா,
பிரிவின் தணலில்
வெந்து சாவது புதிதென்று நினைத்தாயா?
இலையுதிர் காலத்தின் முடிவில் வசந்த காலம்
வரும் என்பதை
நீ தானே கற்றுத் தந்தாய்.

உடைந்த செங்கற்களும்
சின்னஞ்சிறு தட்டை கருங்கற்களும்
வீடுகளாயின.
மஞ்சள் நிற மென்பந்தும்
கொட்டாங்குச்சிகளும்
வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும்
பொருட்களாயின.
கீரைத் தழையும் கோரைப் புற்களும்
கொஞ்சூண்டு ஆற்று மணலும்
குட்டிக் குட்டிக் கூழாங்கற்களும்
பசி தீர்க்கும் அறுசுவை உணவு.
எந்த வேலையை யார் செய்வது?
எந்தப் பாகுபாடும் இல்லை.
வாசல் பெருக்கி கோலம் போட்டான் அவன்.
நுங்கு வண்டியை
வீட்டின் பின்புறம் நகர்த்தி வைத்தாள் அவள்.
டா சொல்லி சாப்பிட அழைக்கிறாள் அவள்.
இரும்மா என்றபடி வந்தமர்கிறான் அவன்.
நான்கு குட்டி வீட்டு சின்ன மனிதர்கள்
சமைத்த உணவைப் பாவனையாய் பகிர்ந்துண்டு
நிஜ வீடு போயினர்.
அவர்கள் மிச்சம் வைத்த உணவை
வயிறார சாப்பிட்டபின்
கால்நீட்டிப் படுத்துவிட்டார்
கோடையின் பகலெங்கும்
அலைந்து களைத்துப் போன கடவுள்.
இரண்டு கல்வீடுகளுக்கும் இடையில்
நடையாய் நடந்து காவல் செய்கின்றனர்
எறும்பு விசுவாசிகள்.

கூடடைய மரங்கள் ஏதுமற்ற
தீவொன்றைத் தேடிப் போகிறேன் மாயா
நீ எங்கிருக்கிறாய்?
வழித்துணைக்கு
உனது பாடலொன்றை இசைப்பாயா?
எனது இரவுகளில்
ஒளிக்கீற்றென படர்வாயா?
எனது கால்கள் இளைப்பாற
மரக்கிளை ஆவாயா?
பௌர்ணமிப் பொழுதில்
மினுக்கும் நட்சத்திரம் போல்
உடன் வருவாயா?
குஞ்சுப் பறவையின் பசியறிந்து
வாய்க்குள் உணவளிக்கும் தாய்ப்பறவையை
எனது வழித்தடத்தில் பார்க்கிறேன்.
நாம் பேசிக்கொள்ள வார்த்தைகள் உண்டு
என்பதை எப்போதும் மறக்காதே.


செல்ஃபிக்குள் எட்டிப் பார்ப்பவர்

செல்ஃபிக்களின் காலத்தில்
முகம் தெரியாத யாரோ ஒருவர்
நமது செல்ஃபிக்குள் எட்டிப் பார்க்கிறார்.
செல்ஃபியில் நாம் புன்னகைப்பது போல
புன்னகைக்கவோ
நாக்கைத் துருத்திக் கண்ணடிக்கவோ இல்லை அவர்.
நமது தேநீர் கோப்பைகளுக்கு
சியர்ஸ் சொல்வதில்லை.
செல்ஃபி எடுக்கும் முன்
நம்மைப் போல்
முகத்தைத் துடைத்துக் கொள்வதில்லை.
தலைமுடியைச் சரி செய்து கொள்வதில்லை.
சட்டையைத் திருத்திக் கொள்வதில்லை.
தொப்பையை உள்ளிழுத்துக் கொண்டு
சிரமப்படுவதில்லை.
மிக மிக இயல்பாக
செல்ஃபிக்குள் தலையை,
முகத்தை
சரியாக ஃப்ரேமுக்குள்
நுழைத்து விடுகிறார்.
செல்ஃபி எடுத்த பிறகு
படத்தை அனுப்பச் சொல்லி
ஒருபோதும் கேட்பதில்லை.
செல்ஃபிக்குள் எட்டிப் பார்ப்பதை
ஒரு கடமையைப் போல் செய்து விட்டு
கலைந்து சென்றுவிடுகிறார்.

அழத் தோன்றும் தருணங்களில்

ஒரு பூந்தொட்டியை விலைக்கு வாங்கி வந்து நீர் ஊற்றுகிறாள்.
மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள்
தனியாக நடந்து செல்கிறாள்
கடற்கரையில் அமர்ந்து
மணலைக் கீறியபடி
அலையின் பேரோசையில்
கண்மூடி லயித்துக் கிடக்கிறாள்
மெல்லிய இசையை
அறைக்குள்
பரவச் செய்கிறாள்
வெற்று தரையில்
கண்மூடிக் கிடக்கிறாள்
தேம்பித் தேம்பி அழுவதற்குப் பதிலாக
எப்போதும் வேறு ஒன்றைச் செய்கிறாள்.
சாதலை விட
வாழ்வதுதானே மேல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்