‘மனித உரிமை மதிப்பெண்கள்’ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொறுப்பை உருவாக்குமா?

0
546

மிண்ட் பத்திரிக்கையில் எழுத்தாளர் சுதீப் சக்கரவர்த்தி அக்டோபர் 23 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது பல கேள்விகளை பலரது மத்தியில் எழுப்பியது. அதன் முக்கியமான அம்சத்தை சுலபமாக சொல்ல வேண்டும் என்றால், “வரையறுக்கப்பட்ட கார்பன் வாயுக்களை வெளியிடும் வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கார்பன் மதிப்பெண் என்ற ஒன்று உள்ளது. அதாவது கார்பன் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நிறுவனங்கள் அதனை சமன்படுத்த அதிக அளவிலான மரங்களை வளர்க்க வேண்டும். அதேபோல், மனித உரிமைகளை மீறி செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மனித உரிமை மதிப்பெண் வழங்கினால் என்ன?”, என சுதீப் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, மனித உரிமைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் அந்த மனித உரிமை மீறலை சமன்படுத்த அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துத் தர வேண்டும் என்பது அவருடைய வாதம்.

நவம்பர் மாதம் 16-18-ஆம் தேதிகளில் நடக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இப்படியான ஒரு வாதத்தை எழுப்ப வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.

ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு இடத்தில் தொழில் நிறுவனம் ஒன்றை எழுப்புகிறது என்றால் அந்த இடத்தில் பல மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.அவர்களது தொழில் நிறுவங்களால் ஆபத்து என்றால் மற்ற நாடுகளுக்குத்தான் இந்த நிறுவனங்கள் படையெடுக்கும். முதலீடுகள் வருகிறதே என அந்த நாடும் நிறுவனங்களை அனுமதிக்கும். ‘நிலம், ஊழல், மனித உரிமைகள் மீறல்” இவை மூன்றும் அரங்கேறும். பல விவசாயிகளின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக்கொள்ளும். பழங்குடிகள் அவர்களது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்வார்கள்.

இந்தியாவில் இப்படியான மனித உரிமை மீறலுக்கான சமீபத்திய உதாரணம் யுனிலிவர் நிறுவனம். பாதரசக் கழிவுகளை பல வருடங்களாக கொடைக்கானலில் கொட்டிவிட்டு அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் எதையும் தரவில்லை. சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் மற்றும் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் போராடிக் கொண்டே இருக்கின்றனர். யுனிலிவர் சற்றும் அசையாமல் இருக்கிறது. இதேபோல், கோகோ-கோலா நிறுவனம், எச்.எம் ஆடை தயாரிப்பு நிறுவனம், ரியோ டிண்டோ நிறுவனம், வேதாந்தா நிறுவனம் என பல பன்னாட்டு நிறுவனங்கள் பல வகைகளில் மனித உரிமைகளை மீறுகின்றன. இந்த பன்னாட்டு நிறுவனங்களால் நிலம், வாழ்வாதாரம், உடல்நலம், என எல்லாவற்றையும் இழக்கும் மக்கள் ஏராளம். அவர்களுக்கு இதுபற்றிய பொறுப்பை ‘மனித உரிமை மதிப்பெண்’ உருவாக்குமா?

கொடைக்கானலில் பாதரசக் கொடுமையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்.
கொடைக்கானலில் பாதரசக் கொடுமையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்.

தொழிலாலளர்களை மதிக்காத ரியோ டிண்டோ நிறுவனம்.
தொழிலாலளர்களை மதிக்காத ரியோ டிண்டோ நிறுவனம்.

அப்படி மனித உரிமைகளை மீறும் நிறுவனங்களுக்கு ‘மனித உரிமை மதிப்பெண்’ என நிர்ணயித்து எந்த இடத்தில் மனித உரிமை மீறல் நடத்தப்படுகிறதோ அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும் என்பதுதான் ’மனித உரிமை மதிப்பெண்ணின்’ அடிப்படை. ’கார்பன் மதிப்பெண்’ என்ற ஒன்றில் கார்பன் வாயுக்களை வெளியிடும் நிறுவனங்கள் அதே இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் கூட மரங்களை நடலாம். ஆனால் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி வேறு இடத்தில் வாழ்வாதாரத்தை வழங்குவது என மனித உரிமை ஆர்வலர், பேராசிரியர் அ.மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

”மனித உரிமையை எளிதில் மீறிவிட்டு ’நான் வேற இடத்தில இத சமாதானப் படுத்திக்கிறேன்” என்பது எந்த விதத்தில் நியாயம். முதலில் அந்த நிறுவனங்களை தண்டிக்க வேண்டும். அதுக்கப்புறம்தான் மனித உரிமை மதிப்பெண் எல்லாம். கார்பன் மதிப்பெண்ணில் இருப்பது போல் மரங்களை வளர்க்கின்ற மாதிரி சாதாரணப் பிரச்சனை இல்லை மனித உரிமை மீறல்”, என்கிறார், அ.மார்க்ஸ்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித உரிமைகளை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு பொறுப்பை உருவாக்கும் என்றால் இந்த யோசனையை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்