வியாபம் ஊழல் வழக்கில் போபால் சிபிஐ நீதிமன்றம் ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மத்தியப்பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (Madhya Pradesh Professional Examination Board-MPPEB ), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. போக்குவரத்து காவலர்கள், காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவத்துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இந்த வாரியம் நடத்தி வருகிறது. வியாபம் (Madhya Pradesh Vyavsayik Pariksha Mandal) எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள், சாட்சிகள், ஊழல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்குகள் சிபிஐ வசம் கடந்த 2015ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், காவலர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மோரேனா மாவட்டத்தைச் சேர்ந்த நரோட்டம் யாதவ் மற்றும் அவரது தந்தை பஹ்வான் சிங் யாதவ், உறவினர் அவினாஷ் சிங், அகர்வால், பிரபாத் மேத்தா ஆகிய ஐந்து பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு போபால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நீதிபதி உபத்யாய், குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது.

கடந்த 2015ஆண்டு டிசம்பரில், கால்நடை மருத்துவ டிப்ளமோ எழுத்துத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அக்சத் சிங் ராஜவத், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் பரியா ஆகிய இருவரை இந்தூர் நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டைனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here