காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்கு நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி நதிநீட் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்.16ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் அளித்திருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல், தமிழகத்துக்கான தண்ணீர் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்து உத்தரவிட்டது. கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

cauvery

இதனையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்பு விடுத்துள்ளது. நான்கு மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளும் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.9) அன்று ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

மத்திய அரசின் இந்த அழைப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் இறுதிக்குள் அமைப்போம் என மத்திய அரசு இதுவரை உறுதியாகக் கூறாத நிலையில், இப்படி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் அழைப்பு விடுப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் சாக்குபோக்கு சொல்வதற்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்றும், பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் சிக்கிவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here