நாடு முழுவதும், தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இன்றும் (செவ்வாய்கிழமை) மற்றும் நாளையும்(புதன்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யூஏ, ஏஐசிசிடியு, எல்பிஎஃப், யுடியுசி ஆகிய 10 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து, தில்லியில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் கூறுகையில், மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தொழிலாளர்களின் நலன் குறித்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மத்திய அரசு தயாராக இல்லை. இதனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரையில், மிகப்பெரிய வேலைநிறுத்தம் இதுவாகும். தொலைத்தொடர்புத் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, மின்சாரத் துறை, வங்கித் துறை உள்ளிட்ட துறைகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும், நாடு முழுவதும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் (ஜனவரி 8, 9) பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், நாடு முழுமையும் வங்கிப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பொதுச் செயலாளர் கூறும்போது “தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசு, வங்கி, காப்பீடு, பிஎஸ்என்எல், அஞ்சல், துறைமுகம், போக்குவரத்து, மின்சாரம், மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய 70 அகில இந்திய சம்மேளனங்களும் இணைந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு தினங்களில் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

கோரிக்கைகள்:

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் விரோத சீர்திருத்தங்களை கைவிடவேண்டும்.

குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,000-ம் நிர்ணயிக்க வேண்டும்.

பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு சேவை வழங்கும் வங்கித் துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது.

வாராக்கடன்களை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.இந்த போராட்டம் காரணமாக, தொழில் உற்பத்தி, அன்றாட தேவைகள் பாதிக்கப்படும்.

வங்கித் துறையை பொருத்தவரை, தமிழகத்தில் 10,000 கிளைகளைச் சேர்ந்த 50,000 ஊழியர்களும், நாடு முழுவதும் 80,000 கிளைகளை சேர்ந்த 6 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, காசோலைகள் பரிவர்த்தனைகள் உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளன. அதுமட்டுமல்லாமல் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் ஒயிட்ஸ் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 600 மையங்களில் வங்கி, காப்பீட்டுத்துறை ஊழியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here