ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளையே அகற்றிவிட வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 42 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை போடுவதென்பது அரசாங்கத்தின் கடமை. அதற்காகத்தான் மக்களிடம் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வரி வசூலிக்கப்படுகிறது.அப்படியிருக்கும் போது சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிப்பது ஏன்? அதனை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து அவர்கள் கொள்ளையடிக்க வழிவிட்டிருப்பதும் ஏன்? அடிக்கிற கொள்ளை போதாதென்று ஆண்டுதோறும் அதை அதிகரித்துக்கொள்ளும்படி சுங்கக் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதித்திருப்பது ஏன்?
ஒப்பந்தத் தொகைக்கு மேல் பலநூறு மடங்கு அதிகமாகக் கொள்ளையடித்த பின்னும், இன்னும் அந்தச் சுங்கச்சாவடிகளை விட்டுவைத்திருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லம் ஒரே விடைதான்; ஆங்கிலேயர்கள் செய்ததைப் போல, மத்திய அரசும், தங்களின் காலனியாகவே தமிழகத்தை வைத்துச் சூறையாடுகிறது என்பதுதான்.
சென்ற ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 22 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது; பிறகு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு, குறைந்தபட்ச கட்டணத்தில் அதிகபட்சமாக 20 ரூபாய் வரை உயர்வு; ஒரு கிலோ மீட்டருக்கு 4.30 ரூபாய் என்ற கணக்கில் வரையறை செய்யப்பட்டது.
ஒரு கிலோ மீட்டருக்கு 4.30 ரூபாய் கட்டணம் என்றால் இதைக் கொள்ளை என்பதன்றி வேறு எப்படிச் சொல்ல முடியும்? இந்தக் கொள்ளையில் மத்திய அரசுக்கு கணிசமான ஒரு பங்கு கிடைக்கிறது; அதில் மாநில அரசுக்கு கொசுறாக மிகச் சிறிய பங்கை எலும்புத் துண்டாகப் போட்டு கொள்ளை பாதுகாக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழக அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்த சுங்கக் கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறது. கடந்த ஏப்ரலில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் 10 விழுக்காடு உயர்த்தப்பட்டது. இப்போது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 10 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓஎம்ஆரில் பெருங்குடி, துரைப்பாக்கம், ஈசிஆர் இணைப்பு சாலை, மேடவாக்கம், நாவலூர் ஆகிய 5 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆட்டோக்களுக்கு, ஒருமுறை செல்ல ரூ.9; சென்று திரும்ப ரூ.17; பலமுறை செல்ல ரூ.30; மாதம் முழுதுக்கும் ரூ.280 என்ற கணக்கில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றமில்லை. ஆனால் மற்ற வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
கார், வேன்களுக்கு, ஒருமுறை செல்ல ரூ.25லிருந்து ரூ.27; சென்று திரும்ப ரூ.50லிருந்து ரூ.54; பலமுறை செல்ல ரூ.80லிருந்து ரூ.90; மாதம் முழுதுக்கும் ரூ.1950லிருந்து ரூ.2150 என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. சரக்கு வாகனங்களுக்கு, ஒருமுறை செல்ல ரூ.97லிருந்து ரூ.107; சென்று திரும்ப ரூ.180லிருந்து ரூ.200; பலமுறை செல்ல ரூ.280லிருந்து ரூ.310; மாதம் முழுதுக்கும் ரூ.6,200லிருந்து ரூ.6,850 என்று உயர்த்தப்பட்டிருக்கிறது.
பல அச்சு வாகனங்களுக்கு, ஒருமுறை செல்ல ரூ.194லிருந்து ரூ.213; சென்று திரும்ப ரூ.360லிருந்து ரூ.400; பலமுறை செல்ல ரூ.560லிருந்து ரூ.615; மாதம் முழுதுக்கும் ரூ.12,500லிருந்து ரூ.13,750 என்று உயர்த்தப்பட்டிருக்கிறது.
வாகனங்களுக்கான இந்தச் சுங்கக் கட்டண உயர்வால் சரக்குகளின் விலை உயரும். அப்படியிருக்கும் போது, இந்தச் சுங்கக் கட்டண உயர்வு, பொருட்களின் விலை உயர்வு என எல்லா உயர்வுகளுமே மக்கள் தலையில்தானே வரி என்னும் இடியாக இறங்கும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகையில் அது நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பை நிகழ்த்தும்.
எனவே தணிக்கையே இல்லாமல் தொடரும் தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிக் கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏது?
ஆங்கிலேயர்கள் செய்ததைப் போல, மத்திய அரசும், தங்களின் காலனியாகவே தமிழகத்தை வைத்துச் சூறையாடுவதன் ஒரு கூறுதான் இந்தச் சுங்கச்சவடிகளும் அவற்றின் கட்டணக் கொள்ளையும். ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு கண்டனத்துக்குரியது. அதனைத் திரும்பப்பெறுவதுடன், தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளையே அகற்றிவிட வேண்டும்” என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.