மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி நிதி: ஆர்பிஐ

0
165

மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  ஒப்புதல் அளித்தது.

ஆர்பிஐ வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றின் மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் உபரி நிதியில் 14 சதவீதத்தை கைவசம் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை அந்நாட்டு அரசிடம் பகிர்ந்தளித்து வருகின்றன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது. ஆனால், அந்த நிதியைத் தர ரிசர்வ் வங்கி மறுத்த நிலையில், அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அமைக்கப்பட்டது. 

இக்குழுவில் ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார், ஆர்பிஐ துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன், ஆர்பிஐ மத்திய வாரிய உறுப்பினர்கள் பாரத் தோஷி, சுதீர் மன்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இது குறித்தான அறிக்கையைத் தாக்கல் செய்ய அக்குழுவுக்கு 90 நாள்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது பின்னர் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
 
இதையடுத்து, அந்தக் குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த அறிக்கையில், மத்திய அரசுக்கு 3 முதல் 5 ஆண்டுகளில் தவணை முறையாக உபரி நிதியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் ஆர்பிஐ மத்தியக் குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here