மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலை கோரியும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் – 6) மந்த்சாவூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

1. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் சிவ்ராஜ்சிங் சவுகான் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டதாகப் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக, புதன்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் 1,100 பாதுகாப்புப் படையினர் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

2. ஆனால் மந்த்சாவூரில் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. மொபைல் இண்டர்நெட் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், மந்த்சாவூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

3. விவசாயிகள் தங்களது போராட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். “எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்” என ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங் அமைப்பின் தலைவர் சுனில் கவுர் தெரிவித்துள்ளார். விவசாயிகளைச் சுட்டுக் கொன்றதன் மூலம் இந்தப் பிரச்சினையை அரசு மேலும் சிக்கலாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

4. விவசாயிகளின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு, காங்கிரஸ் கட்சியே காரணம் என முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், விவசாயிகளைப் போலீசார் சுடவில்லை என்கிறார்.

5. மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம், மாநில அரசிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

6. வன்முறை ஏற்பட்டவுடன் போலீசார் விவசயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

7. கடந்த சில வருடங்களாக போதிய மழையில்லாமல் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் இழப்பையே சந்தித்து வருகின்றனர். அதனால்தான், வங்கிக் கடனைத் அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், தங்களது விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்கவும் அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

8. அரசின் புள்ளிவிவர கணக்கின்படி, 2016ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப் பிரதேசத்தில் 1,600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

9. மத்தியப் பிரதேசம் மட்டுமில்லாமல், அண்டை மாநில விவசாயிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மேலும், நகர்ப்புறங்களுக்கு செல்லும் அத்தியாவசியப் பொருட்களையும் நிறுத்தி விட்டனர். இதனால் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருகளின் விலை உயரும் அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது.

10. விவசாயிகளின் வருமானத்தை அடுத்த இரண்டாண்டிற்குள் இரட்டிபாகும் என பிரதமர் மோடி, அளித்திருத்திருந்த வாக்குறுதிக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஊழல் மலிந்திருப்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்