மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது: களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்

0
58

உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.10 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கான திடல், பார்வையாளர், விஐபி கேலரிகள், வாடிவாசல்கள் தயார் நிலையில் உள்ளன.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக் கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

பின்னர் போட்டி காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. அதனை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.வெற்றி பெறும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்துள்ள 430 மாடு பிடி வீரர்கள் களம்கண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நாளை (ஜன. 15) பாலமேடு, மறுநாள் (ஜன. 16) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று(வியாழக்கிழமை) பார்வையிடுகின்றார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கின்றனர்.இதேபோல ரேக்ளா ரேஸ், மாட்டுவண்டி பந்தயம், சேவல்சண்டை, கபடிபோட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் பல்வேறு ஊர்களில் பொங்கலையொட்டி நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here