மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மதத்தைச் சேராத ஒருவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை ஒரு நபர் ரத்து செய்தார். அந்த நபருக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகள் குவிந்தது. அதற்குப் பதிலளித்த Zomato நிறுவனம் “உணவிற்கு மதமில்லை” என பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் உணவகம் மற்றும் காபி பார் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அருண்மொழி என்பவர் தனது உணவகம் மற்றும் காபி பாரில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என்று விளம்பரப் பலகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது முகநூலிலும் பதிவிட்டுள்ள அருண்மொழி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு என்றும் அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அதை கண்டிக்கும் வகையிலேயே தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அருள்மொழி தனது உணவகம்முன் வைத்துள்ள இந்த விளம்பரப் பலகை அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. அருண்மொழியின் இந்த முயற்சி போற்றுதலுக்கு உரியது என்றும் இதேபோல் அனைத்து உணவகத்திலும் விளம்பரப் பலகை வைத்தால் இந்தியாவில் ஜாதி மத பாகுபாடே இருக்காது என்றும் பலர் கூறுகின்றனர்.