பாஜக, மத ரீதியிலான பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க அரசைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மிதுனபுரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாகவும், மாநிலத்தில் கூட்டுச் சதி ஆட்சி நடைபெறுவதாகவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடியாக திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி, கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரெக் ஓ’ பிரையன் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் அந்த அறிக்கையில் –
கூட்டுச் சதியாட்சியை பாஜகவை விட மிக நன்றாக வேறு எந்தக் கட்சியாலும் செய்ய முடியாது . மத ரீதியிலான பயங்கரவாதத்தை, கூட்டுச் சதியாட்சி நடத்தும் பாஜக ஊக்குவிக்கிறது. பாஜக வெறித்தனமான, தாக்குதல் நடத்தக் கூடிய சதியாட்சியை நடத்துகிறது. மேலும், தங்களது கட்சியினர் பலன்பெறும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தியது. ஊழல் ஆட்சி நடத்தும் பாஜக அரசும், அதன் தலைவர்களும் நெருப்போடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சிக்கான எந்தவொரு கொள்கையும் பாஜகவிடம் இல்லை. அரசின் எந்தவொரு அமைப்பு கொண்டு எங்களை துன்புறுத்தவும் பாஜக முயற்சிக்கலாம். ஆனால், நாங்கள் வீழ மாட்டோம். உலகின் கலாச்சாரத் தலைநகரான மேற்கு வங்கம், அனைவருக்குமான மாநிலம். மேற்கு வங்கத்தில் விவசாயிகள் தற்கொலை நிகழ்வதாகக் கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை நிகழவில்லை என்று நாடாளுமன்ற அறிக்கையே கூறுகிறது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தவறான தகவல்களை பரப்பும் வகையில் பேசினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட், ஒடிஸா, பிகார் என அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். அந்தக் கூட்டத்துக்காக பெருநிறுவனங்களின் பணம் பெருவாரியாக செலவழிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி , மோடி அர்சின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here