”மண்ணையும் மக்களையும் அழிக்க சதி”: கொந்தளிக்கும் மதுரை

மதுரைப் பகுதியில் ஜல்லிக்கட்டு தடையை விவசாயத்தை அழிக்கும் சதியாக மக்கள் பார்க்கிறார்கள்.

1
574
ஜல்லிக்கட்டுக்குத் தயாரான காளை. படம் நன்றி: எம்.ஜெயந்த்

ஜல்லிக்கட்டு இன்றைய சூழலில் ஒட்டுமொத்த தமிழகமும் விவாதிக்கும் ஒரு வார்த்தை. தமிழர்களின் மரபு, பாரம்பரிய விளையாட்டு எனக் கூறப்படும் இந்த விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் இது சிறிது சிறிதாக தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் செயல் என்கிறார் கோவிந்தராஜன். 50 வயதாகும் கோவிந்தராஜன் தான் பிறந்தது முதல் தன் வீட்டிலிருந்த ஜல்லிக்கட்டு மாடுகளுடன் விளையாடும் அளவிற்கு அன்பானவர். பாரம்பரியமாக தனது குடும்பத்தில் காளைகள் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு என்ற பெயரே தவறானது என்கிறார் இவர். ஏறு தழுவுதல் என்பது இதன் பெயர் என்கிறார். பண்டைக்கால ஏறு தழுவுதல் போட்டியின்போது மாடுகளின் நெற்றியில் ஜல்லிக் காசுகள் கட்டப்படும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிப்பது; காளை மாட்டைத் தழுவுதல்தான் ஏறு தழுவுதல். இந்த ஜல்லிக்காசை காளை மாட்டிடமிருந்து கைப்பற்றுபவருக்கே வெற்றி. இந்த வழக்கம்தான் ஏறு தழுவுதல் என்று மருவி பின்னாளில் ஜல்லிக்கட்டாக மாறியது. ஏறு தழுவுதலுக்கான மாடுகளைச் சிறு வயதிலேயே அதன் சுட்டித்தன்மையைக் கொண்டு இனம் கண்டு விடுவோம். எங்கள் வீட்டில் முதலில் மூன்று காளைகளை ஏறு தழுவுதலுக்காகவே வளர்த்து வந்தோம். தற்போது ஒரு காளையாக குறைந்துள்ளது. ஆனாலும் காளை வளர்ப்பதை எந்தச் சூழலிலும் கைவிடவில்லை. இந்தக் காளைகள் எல்லாம் எங்கள் வீட்டில் ஒரு நபராகதான் வாழ்ந்து வருகின்றன. அவைகளை யாரும் துன்புறுத்துவதில்லை. அவைகளும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. பழக்கம் இல்லாத புது நபர்களைக் காணும்போது காளைகள் மிரளும். அவர்கள் காளைகளைத் துன்புறுத்தாதவரை அவை எந்த இடையூறும் செய்யாது.

நாங்கள் காளைகளைப் பாசத்தின் பேரில்தான் வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு எந்தவொரு வருவாயும் கிடையாது. காளைகளின் உணவிற்கு ஒரு நாளைக்கு மட்டும் 300 ரூபாய் செலவாகும். ஏறு தழுவுதல் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஏன், அவற்றில் பங்கேற்க காளை ஓடி வருவதை காணுவதுதான் எங்களின் மகிழ்வான தருணம். அந்த ஒரு நாளிற்காகத்தான் வருடம் முழுக்க காத்திருக்கிறோம். ஏறு தழுவுதல் தடை செய்யப்பட்டும்கூட காளைகளை விற்க வேண்டும் என்ற முடிவிற்கு நானோ, எனது குடும்பத்தினரோ ஒருபோதும் வந்தது இல்லை. தங்களுக்கே உணவு இல்லையென்றாலும் காளைகளுக்கு ஒருபோதும் உணவில் எந்தக் குறையும் ஏற்பட விட்டதில்லை. ஏறு தழுவுதல் ஏதோ பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல. அது நமது பழமைகளில், பாரம்பரியத்தில் ஒன்று. இதை எப்படி அயல்நாட்டு விலங்கு நல ஆர்வலர் அமைப்பான பீட்டா தடைச் செய்தது? நம் நாட்டின் மத்திய, மாநில அரசுக்கு இல்லாத அதிகாரம் எப்படி அயல்நாட்டு அமைப்பிற்கு கிடைத்தது? ஏறு தழுவுதலை அழிப்பதே வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் லாபத்திற்காகத்தான். இதனால் மருந்து வர்த்தகம், உரங்கள் வர்த்தகம் விரிவடையும் என்ற நோக்கில் தான் செய்யப்படுகிறது. ஏனெனில், நமது நாட்டு மாடுகளின் பாலில் எதிர்ப்புச்சக்தி அதிகம். இதனால் நமக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படுவது மிக குறைவாக இருந்தது. ஆனால் ஜெர்சி மாடுகளின் பாலில் அது கிடையாது. அதன் பாலினால்தான் சாக்கரை, கேன்சர் போன்ற நோய்கள் அதிக அளவில் வருகிறது. ஏறு தழுவுதல் போட்டிகளினால் நல்ல வீரியமுள்ள மாடுகள் இனம் காணப்பட்டு இனப்பெருக்கத்திற்கும் மற்ற மாடுகளை உழவிற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஏறு தழுவுதல் தடை செய்யப்பட்டு நாட்டு மாடுகள், காளைகள் உணவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் ஏன் பீட்டா அமைப்பு எதுவும் செய்யவில்லை? அதேபோல், நாட்டு மாடுகள் மற்றும் காளைகளின் கழிவுகளைத்தான் முதலில் விவசாய உரங்களாக பயன்படுத்தினோம். ஆனால் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் அதிக நச்சுத்தன்மை கொண்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நிலங்கள் எல்லாம் நஞ்சாகி உணவு என்ற பெயரில் விஷத்தை உண்டு வருகிறோம். ஏறு தழுவுதலைத் தடை செய்வதால் நாட்டு மாடுகள் இனம் அழிகிறது என்பதைவிட விவசாயம் அழிகிறது என்பதுதான் உண்மை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கவே இதெல்லாம் திட்டமிட்டு அந்நிய வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஏறு தழுவுதலின் போது உயிரிழப்புகள் என்பது மிக குறைந்தளவுதான் அதுவும் காளைகளைப் பற்றி தெரியாத வெளிநபர்களால் ஏற்படுவதுதான். இந்திய அளவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம். தமிழகம்தான் சாலை விபத்துகளில் முதலிடம் வகிக்கிறது. அதற்காக யாரும் சாலைகளில் பயணம் செய்யவில்லையா? இரு சக்கர வாகனங்களில் செல்லவில்லையா? மரணம் என்பது தடுக்க முடியாத ஒன்று. நடந்து சென்றால்கூட விபத்துகள் நடக்கத்தான் செய்கிறது. அதற்காக அதனை தமிழக அரசு தடை செய்து விட்டதா? யானைகள், குரங்குகள், குதிரைகள் கூடத்தான் வித்தை காட்டப்பட்டு வதை செய்யப்படுகின்றன. அதைத் தடுக்க ஏன் பீட்டா அமைப்பு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை?

ஜல்லிக்கட்டுக்கு காளை வளர்க்கும் கோவிந்தராஜன். படம்: இப்போது
ஜல்லிக்கட்டுக்கு காளை வளர்க்கும் கோவிந்தராஜன். படம்: இப்போது

அதேபோன்று பல ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் ஜல்லிக்கட்டு மாடுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான ஒன்று. காளைகளுக்கு ஜல்லிக்கட்டுக்காக எந்தவொரு பிரத்யேக பயிற்சியும் தரப்படுவதில்லை. உணவில் மட்டுமே சிறப்புக் கவனம் காட்டப்படும்; மற்றபடி எந்தச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை. இன்றளவிலும் இறந்த வீட்டிற்குச் சென்று வந்தால் காளைகளைக் குளிக்காமல் தொடுவதுகூட இல்லை. அதனை ஒரு தெய்வத்துக்கு நிகராகத்தான் நாங்கள் வணங்கி வருகிறோம். இம்முறையாவது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து உடனடியாக காளைகளின் பெயரை அகற்றி ஏறு தழுவுதல் நடக்க வழி செய்ய வேண்டும். எந்த அரசானாலும் சரி இந்த ஒன்றை மட்டும் தங்களுக்காக செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இம்முறை நடந்தால்தான் இந்த இரண்டு வருடம் நடைபெறாத வருத்தத்திலிருந்து தாங்கள் மீள முடியும். நாட்டை வெள்ளையரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மீட்டு வெள்ளையரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத்தான் நம்மை மாற்றியுள்ளனர்.

ஏறு தழுவுதல் தமிழர்களின் மரபு என்பதைவிட அது மக்கள் உணர்வு, இனம் சார்ந்த ஒன்று. அதிகாரம் படைத்த ஒருவர், மற்றவரின் உணர்வை உதாசீனப்படுத்துவதால் பிறரின் மனம் எப்படிக் காயப்படுமோ, அப்படித்தான் நாங்களும் காயப்படுத்தப்பட்டு வருகிறோம். சொந்த நாட்டில் நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அன்னிய நாட்டு விலங்கு நல அமைப்பின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவது மிகவும் வெட்ககேடானது என்கிறார் முத்துக்குமார். நான் நினைவு தெரிந்த நாள் முதல் காளைகளுடன் தான் வாழ்ந்து வருகிறேன். ஏறு தழுவுதல் போட்டிகளிலும் பங்கேற்பேன். அந்த விழாக்குழு ஒருங்கிணைப்பிலும் இருப்பேன். ஒரு கல்யாண வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த மாதங்களில் நாங்கள் அனைவரும் ஓயாது ஏறு தழுவுதல் போட்டிக்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம். இது ஒரு பண்பாடு. மரபு, வீரம் என்பதைத் தாண்டி இந்த பகுதி மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் நிகழ்வு. இதனைத் தடை செய்ததால் ஏற்பட்டுள்ள வலியை விவரிக்க முடியாது. ஏறு தழுவதலை அழிக்கவும் காளைகளை அழிக்கவும்தான் இதுபோன்று செய்யப்படுகிறது. ஏறு தழுவுதலை அழிக்கும்போது விவசாயம் தானாக குறைய தொடங்கும். மேலும் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்படும். அது மட்டுமல்லாது இதனை அழிப்பதன் வாயிலாக இயற்கை விவசாயத்தை அழிக்கின்றனர். நம் நாட்டு விவசாயத்தில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டதே இல்லை. மாடுகளின் கழிவையே சிறந்த பூச்சிக்கொல்லி மற்றும் உரமாக பயன்படுத்தி வந்தோம். நாட்டு மாடுகளை அழித்துவிட்டால் நாம் யூரியா, பொட்டாசியம் போன்றவற்றைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். தற்போதே பலர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் மக்களுக்குச் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களும் வருகின்றன.

மக்களுக்கான அரசு மவுனம் சாதிப்பதால்தான் வெளிநாட்டு அமைப்பு வந்து நம் நாட்டில் இத்தனை பெரிய அதிகாரங்களைப் பெற முடிந்துள்ளது. மாடுகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக பேசும் பீட்டா அமைப்பை சார்ந்த அதிகாரிகள் வீட்டில் நாய், பூனை, கிளி போன்றவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவதில்லையா? ஏன் அவர்கள் அதனை வளர்க்கிறார்கள்? இது துன்புறுத்தல் இல்லையா? இது சுதந்திர தடை இல்லையா? அத்தனை பறவைகள், நாய்களையும் அதன் போக்கில் வாழவிடாது செய்வது அன்பு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் வருடத்திற்கு ஒரு நாள் ஏறு தழுவுதலில் பங்கேற்க செய்வதை துன்புறுத்தல், வதை என்கின்றனர். வருடம் முழுக்க சிறைப்படுத்தப்படுவதுதான் அன்பா? தான் விரும்பியதைச் செய்ய முடியாமல் கட்டப்பட்டு அவர்கள் தருவதை விரும்பி ஏற்க செய்கின்றனர். இதை எல்லாம் பற்றி யாரும் பேசுவதில்லை. என்னமோ இந்தியாவிலே இந்த ஏறு தழுவுதல்தான் விலங்குகளைத் துன்புறுத்தும் விளையாட்டுபோல் சித்தரிக்கிறார்கள். ஏன் குதிரைப் பந்தயங்களில் குதிரைகள் வதைக்கப்படவில்லையா? காவல் துறையில் தடய சேகரிப்பில் முக்கிய பங்காற்றும் மோப்ப நாய்கள்கூட பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லையா?

உண்மையில் காளைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவர்களால்தான் ஏறு தழுவுதல் விளையாடப்படுகிறது. குரங்குகளை வளர்ப்போர் அதை வைத்து வித்தை காட்டி சம்பதிக்கின்றனர். யானை, குதிரை போன்ற விலங்குகளும் சர்க்கஸ்களில் கூண்டில் அடைக்கப்பட்டு, பல்வேறு பயிற்சிகள், சாகசங்களுக்கு ஆளாக்கப்படுகிறது. இவற்றை வளர்ப்பவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் வருமானம் கிடைக்கிறது. ஆனால் காளைகளால் எந்த ஒரு வருவாயும் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு காளை உண்ணும் உணவிற்கு மட்டும் 500 ரூபாய் வரை செலவு செய்கிறோம். நாங்கள் வாழும் ஏழ்மை நிலையிலும் இவ்வளவு பெரிய தொகையை எந்த லாபமும் இல்லாவிட்டாலும் செய்கிறோம் என்றால் காளை எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் என்றுமே காளைகளைத் துன்புறுத்தியது இல்லை. அவற்றுக்குப் பயிற்சி எனக் கூறி பலவீனப்படுத்தி பட்டினி போட்டுப் பார்த்து நின்றதில்லை. மேலும், பண்டைய காலத்திலிருந்தே காளைகள் தெய்வங்களாகத்தான் வணங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பிரதிப்பலிக்கும் விதமாகத்தான் தமிழக கோயில்கள் அனைத்திலும் நந்தி சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
செங்கல் சூளையில்தான் வேலை செய்கிறேன்; தொழிலுக்குத் தேவையான தண்ணீர்கூட இல்லை. காசு கிடைக்கும்போது தண்ணீர் விலைக்கு வாங்கி வேலை செய்கிறோம். இந்தப் பகுதியிலுள்ள நீர் நிலைகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் இந்த வருட பருவ மழை பொய்த்ததாலும் கிணறுகளில்கூட தண்ணீர் இல்லாமல் அடிமட்டத்திற்குப் போய்விட்டது. இதனால் வறுமை எங்களை அத்தனை பக்கங்களிலிருந்து சூழும்போதும் மனம் தளர்ந்து காளையை விற்றுவிடலாம் என எண்ணியதில்லை. எந்த வறுமையிலும் நம்மைப் பெற்றவர்களையும் நாம் பெற்றெடுத்த பிள்ளைகளையும் விற்க மாட்டோமோ அதுபோல்தான் காளைகளையும் பார்க்கிறோம். காளைகளைக் காப்பதற்காகதான் பீட்டா செயல்படுகிறது என்றால் ஏன் அந்தக் காளைகள், மாடுகள் எல்லாம் அடிமாடுகளாக அண்டைய மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைப் பற்றி பீட்டா எதுவும் பேசவில்லை. இது வதை இல்லையா, இங்குள்ள மக்களில் சிலரே வறுமையின் காரணமாக காளைகளை அடிமாட்டிற்கு விற்றுள்ளனர். ஏன் இதற்கெல்லாம் பீட்டா எதுவும் செய்யவில்லை? சொல்லவில்லை? லாரிகளில் கூட்டம் கூட்டமாக கொண்டு செல்வது அவர்கள் கண்ணில் படவில்லையா?

ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் முத்துக்குமார். படம்: இப்போது
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் முத்துக்குமார். படம்: இப்போது

இந்த வருடம் கண்டிப்பாக ஏறு தழுவுதல் போட்டி நடைபெற வேண்டும். காங்கிரஸ், திமுக அரசின் ஆட்சியின்போது தடை விதிக்கப்பட்டாலும் ஏறு தழுவுதல் தடையின்றி நடைபெற்றது. ஒழுங்குமுறைகள் வழங்கப்பட்டு அதன்படி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதன்பின் நேர்ந்த ஆட்சி மாற்றத்தில்தான் தடை செய்யப்பட்டுள்ளது. காலங்கள் மாறிவிட்டது; தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பதற்காக எல்லாவற்றையும் இயந்திரமயம் ஆக்கிவிட முடியாது. உறவுகள், உணர்வுகள் எத்தனை பெரிய வளர்ச்சி பெற்றாலும் மறுவதில்லை. ஏறு தழுவுதல் போட்டிக்கு இத்தனை பெரிய இடையூறு செய்பவர்கள் ஏன் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில்கூட சமீப காலங்களில் மரணம் ஏற்படுகிறது; அதனால் அதனைக் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் விளையாடலாம் என வலியுறுத்தாமல் இருக்கின்றனர்? நாட்டின் நிதியில் பெரும் பகுதி கிரிக்கெட் விளையாட்டிற்குத்தானே செலவிடப்படுகிறது. இப்படி தொடர் செலவுகள் எதற்கு? அதையும் மின்மயம் ஆக்கிவிடலாமே? ஏன் எங்கள் விளையாட்டு மீது மட்டும் இத்தனை கோபம்? இந்த முறை எங்களுக்கு ஏறு தழுவுதல் வேண்டும்.

கோவிந்தராஜனும் முத்துக்குமாரும் சொன்னதுதான் இங்குள்ள சாதாரண மக்களின் உணர்வாக இருக்கிறது; தங்களுடைய பண்பாட்டை ஏளனம் செய்கிற மேட்டிமைத்தனத்தை அவர்கள் சினத்தோடு கேள்வி கேட்கிறார்கள்; இந்த உணர்வலைகளில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருக்கலாம்; ஆனால் களத்தில் கொந்தளிப்பு இருப்பது உண்மை; இந்தக் கொந்தளிப்பில் நியாயமில்லை என்று புறந்தள்ளுவது சாதாரண மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்வதாகிவிடும் என்று ஒரு செய்தியாளராக நான் நினைக்கிறேன்.

இதையும் படியுங்கள்: திம்மக்கா 200 ரூபாய்க்காக குழந்தையை விற்றாரா?

இதையும் படியுங்கள்: நாங்க இதுபோல பஞ்சத்த பாத்ததில்ல

1 கருத்து

ஒரு பதிலை விடவும்