மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், ரஜினியின் பேட்ட படத்தில் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிட்டுள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நடிகராக இருக்கிறார் இயக்குநர் பாசிலின் மகன் பகத் பாசில். எந்த வேடமாக இருந்தாலும் அதில் அப்படியே பொருந்தக் கூடிய நடிகர். தமிழில் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது மலையாளப் படங்களுடன் ஒப்பிடுகையில் வேலைக்காரன் யானைப் பசிக்கு சோளப்பொரி மட்டுமே.

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்யின் நடித்த வேடத்தில் முதலில் பகத் பாசிலைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். கடைசி நேரத்தில் அவர் விலக, அருண் விஜய்க்கு அதிர்ஷ்டம் அடித்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் ஏங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் உள்ளதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே பகத் பாசில் செக்கச் சிவந்த வானத்தில் நடிக்கவில்லை என்றனர். ஆனால், மணிரத்னம் சொன்ன கதையை விஷுவலாக யோசிக்க முடியவில்லை, அதனால்தான் படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்தார் பகத் பாசில்.

ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க பகத் பாசிலை கேட்டிருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனையால் அவர் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லையாம். கால்ஷீட் பிரச்சனையா இல்லை மணிரத்னம் படத்தைப் போல் வேறு ஏதேனும் காரணமா? பகத் பாசில் சொன்னால்தான் தெரியும்.

மணிரத்னம், ரஜினி என இருபெரும் பிரபலங்களின் படத்தை பகத் பாசிலைத் தவிர வேறு யாரும் மறுத்திருப்பார்களா என்பது ஆச்சரியமான கேள்வி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்