மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் வெளியாகி நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவரது அடுத்தப் படத்தின் நாயகர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அலைபாயுதே படத்திற்குப் பிறகு மணிரத்னத்தின் படங்கள் எதுவும் வசூல்ரீதியாக திருப்திகரமாக அமையவில்லை. கடல், காற்றுவெளியிடை போன்றவை பெரும் நஷ்டத்தை சந்தித்தன. மணிரத்னம் தனது சேமிப்பில் பெரும்பகுதியை கடந்த பத்து வருடங்களில் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செக்கச் சிவந்த வானத்தின் கமர்ஷியல் வெற்றி அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஆனந்தப்படுத்தியிருக்கிறது. அந்த உற்சாகத்துடன் அடுத்தப் படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளார்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி, மணிரத்னம் அடுத்து ஒரே கதையை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்குகிறார். தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ்பாபும், இந்தியில் ஷாருக்கானும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

மணிரத்னத்தின் முடிவுகள் படப்பிடிப்புக்கு போகும் தினத்தில்கூட மாறக்கூடியவை. மகேஷ்பாபு படத்தை இயக்க இருந்தவர்தான் கடைசியில் செக்கச் சிவந்த வானத்தை இயக்கினார். மணிரத்னத்தின் இந்த மும்மொழி திட்டம் கரைசேருமா இல்லை காற்றில் கரையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்