(ஆகஸ்ட் 15, 2015இல் வெளியான செய்தி மீள்பிரசுரிக்கப்படுகிறது.)
ஜெயலலிதாவைச் சந்தித்ததில் பூரித்துப்போய் நிற்கிறார் எம்.ஆறுமுகம்.தச்சுத் தொழில் செய்து வந்த இந்த 75 வயது முதியவர் புத்திசாலி. ஜெயலலிதாவைச் சந்திக்க எல்லோரும் போயஸ் தோட்ட்த்தின் பின்னி சாலையில் நிற்கும்போது இவர் மட்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து நின்றார்; டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் மால் அருகே அம்மாவின் டயோட்டோ லேண்ட்க்ரூஸர் கடந்து செல்லும்போது பணிந்து ஒரு கும்பிடு போடுவார். பதினைந்து மாதங்களாக அயராமல் வணக்கம் வைத்த இவருக்குக் கடைசியாக ஜெயலலிதாவை முதலமைச்சர் சேம்பரில் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. குடும்ப ஆதரவு இல்லாத இந்தக் கட்சி விசுவாசிக்குக் முதுமையைச் சிரமமில்லாமல் கடத்துவதற்கு நிதியுதவி செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் அன்புப் பார்வை கிடைப்பதற்காக அன்பரசு சுமார் மூன்று வருடங்களாக பின்னி சாலையில் கும்பிட்டபடியே நின்றார். இப்போது இடத்தை மாற்றிவிட்டார்; எம்.ஜி.ஆர் சமாதிக்கு எதிரே சென்னைப் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் அம்மாவின் “கான்வாய்” வரும்போது ஆஜராகிவிடுகிறார். என்ன வேண்டும் அன்பரசுக்கு? சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அ.தி.மு.க ஒன்றியப் பிரதிநிதியாக இருக்கும் இவருக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வேண்டும் என்று நிற்கிறார். ”பதவிகூட முக்கியம் இல்லீங்க; ஒரு சாதாரண, எளிய தொண்டனும் அம்மாவை நேரில் சந்திக்க முடியும் என்பதை நிரூபிப்பதுதான் எனக்கு முக்கியம்” என்று சமத்தாகப் பேசுகிறார் அன்பரசு.
மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை கவுன்சிலர் நூர்ஜஹான், காலையில் ஜெயலலிதா கோட்டைக்குப் போகும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் ராயப்பேட்டை பாலத்துத் தூண் அருகே நின்று கையெடுத்து பவ்யமாகக் கும்பிடுவார். இதற்குச் சற்று முன்னதாக உட்லண்ட்ஸ் ஓட்டல் அருகே நின்று வணங்கி அம்மாவின் அன்பைப் பெற்றவர்தான் அருப்புக்கோட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ வைகைச்செல்வன். முதலமைச்சரது வாகன வழியில் இன்னும் பின்னோக்கி போயஸ் தோட்டத்து பின்னி சாலைக்குச் சென்றால் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், ராஜேந்திர பிரசாத் என்று ஒரு பெருங்கூட்டமே மீண்டும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறது. ஆற்காடு நகராட்சியின் முன்னாள் தலைவி ராதிகா ஏதாவது பதவி கிடைக்காதா என்று வருடக்கணக்கில் ஜெயலலிதாவின் பாதையில் கரம்கூப்பி நிற்கிறார். “ஏழு வருஷமாக அம்மாவின் திருமுகம் நோக்கி வணங்கி நிற்கிறேன்; என்றைக்காவது நிச்சயம் எனக்கு அம்மா வாய்ப்பு தருவார்கள்” என்கிறார் ராதிகா.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, 2006 முதல் 2011 வரை ஜெயலலிதா வெளியில் வரும்போதெல்லாம் எதிர்ப்பட்டுக் கைகூப்பி வாய்ப்பு பெற்றவர். பூனைப்படையின் துரத்தலுக்கெல்லாம் ராஜலட்சுமி ஒருபோதும் கலக்கமடைந்ததில்லை. அ.தி.மு.க பேச்சாளரும் நடிகையுமான வாசுகி, தனது கட்சி பேச்சாளர் பதவி பறிபோனதும் பதறினார். “அம்மாவை நேரில் பார்த்தால் பதவியைப் பெற்றுவிடலாம்” என்று கட்சி பெரியவர்கள் சொன்னதை நம்பிக் களமிறங்கினார். ”காலையில் எட்டு மணிக்கெல்லாம் டிஃபனைக் கட்டிக்கொண்டு போயஸ் தோட்டம் வந்து விடுவேன். அம்மா எங்கு போனாலும் அங்கு போய் நிற்பேன்” என்கிறார் வாசுகி. சுமார் இரண்டு வருடம் அம்மாவுக்குக் காட்சி தந்து மீண்டும் கட்சிப் பேச்சாளர் பதவி வாங்கினார் இவர். இப்போது அ.தி.மு.க அரசின் நான்காண்டு சாதனைகளை மேடைதோறும் பேசி வருகிறார்.
சேலம் ஜலகண்டபுரம் அன்பரசுவின் அப்பா ஊரில் டீக்கடை நடத்துகிறார். எம்.ஜி.ஆரால் பெயர் சூட்டப்பட்ட அன்பரசு சென்னை வரும்போது சேலத்திலிருந்து சுமார் 50 காட்டன், பட்டுப் புடவைகளை எடுத்து வருகிறார். டி.எம்.எஸ், அக்ரி ஆஃபீஸ், ஈபி ஆஃபீஸ் என்று சென்னையின் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மகளிரிடம் புடவை விற்றால் சேலைக்கு 150 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த லாபத்தில் லாட்ஜ் வாடகை, சாப்பாட்டுச் செலவைக் கவனித்துவிட்டு அம்மாவின் பார்வைக்காக சென்னையின் தெருக்களைச் சுற்றி வருகிறார். போயஸ் தோட்டத்திலிருந்து ஜெயலலிதா புறப்பட்டுவிட்டால் பின்னி சாலையில் டீ விற்கிறவர் இவருக்குத் தகவலை உறுதி செய்கிறார். திருவல்லிக்கேணியிலிருந்து ஆட்டோ பிடித்து எம்.ஜி.ஆர் சமாதிக்கு முன் வந்து நிற்கிறார். ”தேர்தலில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வதுதான் எனது பலம். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பின்னி சாலையில் நின்று கும்பிட்ட என்னைப் பார்த்து அம்மா புன்னகை பூத்ததை மறக்க முடியாது” என்கிறார் அன்பரசு.
“என்னைப்போல காத்திருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களாக, எம்.பிக்களாக இருக்கிறார்கள். இப்படிக் காத்துக் கிடந்தவர்களுக்கு பல முறை அம்மாவே நேரடியாக வாய்ப்புகளைத் தந்திருக்கிறார்; நியாயம் செய்திருக்கிறார்,” என்று சொல்லும் அன்பரசு ஓய்வதாக இல்லை. உடல்நலக் குறைவால் ஜெயலலிதா பதினொன்று நாட்களாக வெளியில் வராத காலத்தில் (ஜூலை 5 முதல் 16 வரை) அன்பரசுவைச் சந்தித்தேன். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதற்காக அன்பரசு கடவுளைக் கும்பிடுகிறார். வருடக்கணக்கில் காத்திருக்கும் கரங்கள் பிரார்த்தனையில் எழுகின்றன.