மக்கள் பரிசோதனை எலிகளா? கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம் – திருமாவளவன்

0
216

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சோதனை வெள்ளோட்டம் பார்க்க மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி ஆகும்.

கோவாக்சின் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த கூடாது என்றும் சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ ஏற்கனவே கூறினார். இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன், தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்ற போதுமான சோதனைகளை முடிக்காத தடுப்பூசிகளை பயன்படுத்தக் கூடாது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சோதனை வெள்ளோட்டம் பார்க்க மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? சத்தீஷ்கரை போலவே தமிழகத்திலும் கோவாக்சின் தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here