பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.

மோடி அரசு கொண்டு வந்த ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அரசு பணத்தை தனியாருக்கு கொடுக்கும் அதிகாரப்பூர்வமான வழியாக செயல்படுகிறது என்று எய்ம்ஸ் டாக்டர்கள் உட்பட பல பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற வெற்றுத் திட்டங்களுக்குப் பதிலாக, அனைவருக்குமான சுகாதாரத்தை வழங்கும் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமான எய்ம்ஸ்-இன் சமூக உணர்வுக்கான முன்னணி அமைப்பு ‘ஆயுஷ்மான் பாரத்; உண்மைகளும் கட்டுக்கதைகளும்’ என்ற தலைப்பில், விவாதத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய பல மருத்துவர்கள் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகளை பற்றி பேசினர் .

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் புதிய பாட்டிலில் இருக்கும் பழைய கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக நல மையம் பேராசிரியர் விகாஸ் பாஜ்பய் கூறினார்.

அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பிமா யோஜனா உட்பட பல திட்டங்களின் தோல்வி குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தத் திட்டங்களை ஆரம்பத்தில் செயல்படுத்தும்போது ஏற்பட்ட குறைகள் மீண்டும் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பேசினார்.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்திற்கான போதிய நிதி ஆதாரங்களை உருவாக்கவில்லை. உடல் நலக்குறைவான மக்கள் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளின் ஆரோக்கியம் பற்றிய அறிவே இல்லாமல் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது . மக்களின் பணத்தை தனியாருக்கு கொடுக்கும் அதிகாரப்பூர்வ வழியாக இருக்க வேண்டி மட்டுமே உருவாக்கப்பட்ட திட்டம் இது என்றும் கூறினார் பேராசிரியர் விகாஸ் பாஜ்பய்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையின் தலைவரான சுப்ரதா சின்ஹா, ஆயுஷ்மான் பாரத் அதிக செலவுகள் செய்யவேண்டியிருக்கிற புறநோயாளிகளுக்கு உதவவில்லை என்றார். அதுபோல, எந்தவொரு சுகாதார திட்டத்தின் முக்கிய நோக்கமும் பொது சுகாதாரத்தின் வசதிகளை மேம்படுத்துவதாகவும், வலுபடுத்துவதாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அரசு வழங்கும் நேரடியான சுகாதார சேவையைக் காட்டிலும் காப்பீடு என்பது குறைவான பயனை அளிக்கக்கூடியது எனவும் கூறினார்.

அரசு, சேவையை வழங்கும் நிலைப்பாட்டிலிருந்து சேவையை தனியார் நிறுவனங்களிலிருந்து வாங்கும் நிலைப்பாட்டுக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல மருத்துவ துறையைச் சேர்ந்த பேராசிரியர், டாக்டர். பிரதாப் சரண் கூறினார். இது அடிப்படை பொறுப்பை விட்டுவிலகுவதாகும் என்றும் அவர் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை பேராசிரியரான மருத்துவர் ஷா அலாம் கான், உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வாழும் மக்கள், மருத்துவத்துக்காக தங்களின் சேமிப்புகளிலிருந்து மிக அதிகமான பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தங்கள் மருத்துவத்துக்காக அதிக பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கும் நாடுகள் இரண்டும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு போருக்கு தயாரானது . இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் தங்கள் நாட்டு மக்களின் ஆரோக்கிய நலன் குறித்து இந்த இரு நாடுகளும் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று.

மக்கள் இந்த திட்டத்தில் சேருவதற்காக பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த அரசு அமைந்தவுடன் 2014-இல் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டிலேயே பொது சுகாதாரத்துக்கான நிதி 20% குறைக்கப்பட்டது. பொதுசுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை” என்றார் ஷ அலாம் கான்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹர்ஜித் பாட்டீ, நிதி ஒதுக்கீடு அரசின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை. 10 கோடி குடும்பங்களுக்கு ரூ. 6400 கோடி என ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு ரூ. 128, ஒரு குடும்பத்துக்கு ரூ. 640 என்பது மிகக் குறைவான தொகையாகும். இதை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைப் பெற முடியாது என்று ஹர்ஜித் பாட்டீ கூறுகிறார்.

ஆயுஷ்மான் திட்டம் ஒரு கண் துடைப்புக்காக அமல்படுத்தப்பட்ட திறமையற்ற அரசின் திட்டம் . தேவையான சுகாதார வசதிகளை திறம்பட வழங்க முடியாத அரசினால் உருவாக்கப்பட்ட திட்டம் என்றும் அவர் கூறினார்.

மேற்கு நாடுகளில், அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்குவதில் தேசிய காப்பீடு வெற்றிகண்டுள்ளது.
வலுவான ஒழுங்குமுறை வழிமுறைகளை பின்பற்றுவதால் தனியார் துறைகளின் தலையீட்டை கட்டுப்படுத்துகிறது என்று சமூக முன்னேற்றத்துக்கான கவுன்சிலைச் சேர்ந்த ஆசிரியர் இம்ரானா குவதீர் கூறினார்.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அடிப்படை சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளை கடுமையாக குறைப்பதன் மூலம் அவை புறக்கணிக்கப்படுகிறது. இதனால் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிறுவனங்களின் சுமைகள் அதிகரிக்கின்றன. RSBY மற்றும் PMJAY போன்ற திட்டங்களின் மூலம் தனியாரின் லாபத்தை அதிகரிக்கச் செய்கிறது அரசு, இதன்மூலம் அரசு தனியார் துறைகளின் பங்களிப்பை அதிகப்படுத்துகிறது என்றார்.

Courtesy : News18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here