”மக்கள் பணத்தைப் பலவந்தமாக பறிப்பது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை”: ஜோதி சிவஞானம்

0
539

(நவம்பர் 29,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

நாடு முழுக்க ரூபாய் நோட்டு ஒழிப்புதான் பேசுபொருளாக இருக்கின்றது. பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மக்களின் குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் அவர்களைச் சந்தித்தோம். அவர் தெரிவித்த கருத்துகளை இங்கே பதிவிடுகின்றோம்.
இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கை கறுப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல் என்று கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் கறுப்புப் பணம் என்றால் என்ன?

கறுப்புப் பணம் என்பது, அரசுக்கு வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட பணம். அதாவது அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, வணிக வரி போன்ற வரிகளைச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்து சேர்த்த பணம். இவற்றைத்தான் நாம் கறுப்புப் பணம் என்கிறோம். இப்படி வரி கட்டாமல் சேர்க்கப்பட்ட பணத்தை முட்டாள்கூட கையில் வைத்துக்கொள்ள மாட்டான். இத்தகைய கறுப்புப் பணம் 95 சதவீதம் சொத்தாகவும், வீடு, நிலம், தங்கம், பங்குச் சந்தை, தொழில்கள் போன்றவற்றில் முதலீடாகவும் உள்ளது. இவை வெளிநாடுகளில் 72 சதவீதமும் இந்தியாவில் 28 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து சதவீதம் மட்டுமே ரொக்கமாக புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவிலுள்ள மொத்த பணத்தின் மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். இவற்றில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டாக இருப்பவற்றின் மதிப்பு 14 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி. அதாவது 86 சதவீதம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். மீதம் உள்ள 16 சதவீதம்தான் 10 ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் நோட்டுகளாக உள்ளன. இந்திய நாட்டின் பொருளாதாரம் என்பது cash economy. வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல் cash less economy அல்ல. இந்திய நாட்டில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேலான மக்கள் பணத்தை ரொக்கமாக பயன்படுத்தி தங்களது அன்றாட நடவடிக்கைகளை நகர்த்தக் கூடியவர்கள். இப்படி ஒரே இரவில் இந்தியாவிலுள்ள மொத்த பணத்தில் 86 சதவீதமாக உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது நாட்டைப் பின்நோக்கியே இழுத்துச் செல்லும்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமெனில் பொதுமக்கள் வங்கிகளை நோக்கித்தான் வந்தாக வேண்டும். ஆனால் இந்தியாவிலுள்ள வங்கிகள் ஒரு லட்சம் பேருக்கு 10.06 என்ற அளவிலும், ஏடிஎம் மையங்கள் 16 என்ற அளவில் மட்டுமே உள்ளன. இதனால் உடனடியாக மக்களிடம் உள்ள பணத்தை மாற்ற இவை போதுமானது அல்ல. இவை மட்டுமல்லாமல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு இன்னும் அச்சடித்து முடிக்கவில்லை. அவற்றை அச்சடித்து முடிப்பதற்கு குறைந்தது இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும். புத்தகங்களை அச்சடிப்பதுபோல் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியாது. ரூபாய் நோட்டுகளில் உள்ள இரகசிய எண்களை மாற்றி மாற்றி அச்சடித்தாக வேண்டும். இதற்கு குறைந்தது ஆறு மாதமாகும் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்; ரூபாயின் சர்வதேச மதிப்பு சரியும். இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் காணப்படும். இவற்றின் பாதிப்புகளை இப்போது நம்மால் அளவிட முடியாது. நாட்கள் செல்ல செல்ல அதன் பாதிப்புகள் முழுமையாக தெரியவரும். நாட்டின் மொத்த வருமானத்தில் பணத்தின் பங்கினை ஜிடிபி (gross domestic product) மூலம் அளவிடுகின்றோம். ஜிடிபி ஒரு நாட்டில் அதிகமாக இருந்தால் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது என்றும், குறைவாக இருந்தால் பணப்புழக்கம் குறைவாக உள்ளது என்றும் பொருள். உலகிலேயே இந்தியாவில் ஜிடிபி அதிகமாக காணப்படுகின்றது. அதவது 12 சதவீதம் அளவில் பணப்புழக்கம் உள்ளது. இத்தகைய பின்னணி கொண்ட ஒரு நாட்டில் 86 சதவீதமாக உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது மிகவும் தவறான ஒன்று.

நாட்டிலுள்ள 120 கோடி மக்களின் கைகளிலிருந்த பணம் 4.30 லட்சம் கோடியை வங்கிகள் பெற்றுக் கொண்டுள்ளன. இவற்றை எப்போது வேண்டுமானாலும் எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் இவற்றை எடுப்பதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிப்பது, மை வைப்பது போன்ற நடைமுறைகள் பணத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும். ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் கர்வனர் அளித்துள்ள உறுதிமொழிக்கும் (I promise to pay the bearer the sum of five hundred) அதன் மீது மக்களுக்குள்ள உரிமைக்கும் மதிப்பு இல்லாமல் போகும். வங்கியில் மக்கள் முதலீடு செய்துள்ள பணத்தை எடுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமை மற்றும் நம்பகத்தன்மை சிதைந்தால் பிற வகையான முதலீடுகளுக்கு மக்கள் மாறிச் சென்றுவிடுவர்.

ரூபாயின் மதிப்பு குறையும்போது பொருட்களின் விலை அதிகமாகும். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்தியாவிற்கு பெட்ரோல், தங்கம் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டுமானால் ரூபாயை டாலராக மாற்றியாக வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் போகும். இதன் காரணமாக அந்நிய செலாவணி பெருகும். சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை வெளியிடாமல் இரகசியம் காப்பதற்கான காரணம் என்ன? வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கறுப்புப் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பொதுமக்களின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு துல்லியத் தாக்குதல் என்பதா? இதற்கு பெயர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்ல; கார்ப்பரேட் பாம் என்று பெயர். என்னால் எதிரியை இனம்கண்டு அழிக்க முடியாது; அதனால் அனைவரையும் சேர்த்து தாக்குவது; அமெரிக்கா வியட்நாமைத் தாக்கியது போல. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட கறுப்புப்பணப் புழக்கம் அதிக அளவில் உள்ளது. ஆனாலும் அவர்கள் இது போன்ற அறிவிப்பை எப்போதும் செய்தது கிடையாது. இத்தகைய அறிவிப்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்தியாவில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஜீரோ பேலன்ஸ் மட்டுமே வைத்திருக்கும் சாமானியர்கள். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்பப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தக்கூடியவர்கள். சேமிப்பு என்ற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது. அப்படிப்பட்ட மக்கள் வங்கிக்கு வரவேண்டிய தேவையும் கிடையாது. ஆனால் சொத்து வைத்திருக்காதவர்கள், பணப்பரிவர்த்தனைகளை வங்கியின் மூலம் மேற்கொள்ளாதவர்கள் என்பதால் வங்கிகள் அவர்களுக்கு கடன் உதவிகளும் வழங்குவதில்லை. கடந்த 2014ஆம் வருட நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன? வெளிநாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா பதினைந்து லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்றார். இப்போது அதைச் செய்வதற்கு மாறாக மக்களிடம் உள்ள பணத்தைப் பலவந்தமாக பறிப்பது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியது உண்மைதான். இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற அறிவிப்பினை செய்யவே கூடாது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்