மக்கள் தொகை பற்றிய ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுக்கதைகள்: மோகன் குருசாமி

0
2301

(ஆகஸ்ட் 24, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தன்னுடைய பழைய அஸ்திரத்தை மீண்டும் கையிலெடுத்துவிட்டது. ஆக்ராவில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் குடும்ப பிரபோதன் நடத்திய யுவ தம்பதி சம்மேளனத்தில் 2000 இளம் தம்பதியர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் பேசிய ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்; இந்து தம்பதியர் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். ”இந்துக்களின் மக்கள் தொகை உயரக்கூடாது என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லையே; மற்றவர்களின் மக்கள் தொகை உயரும்போது இந்துக்கள் தங்களது மக்கள் தொகையை உயர்த்துவதை எது தடுக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் மோகன் பகவத்; ”பிரச்சினை நமது அமைப்பில் இல்லை; சமூகச் சூழலில்தான் இருக்கிறது” என்றும் சொல்லியிருக்கிறார் பகவத்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அவர் வாதங்களை முன்வைக்கிறார்; 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் பல மதப்பிரிவினரின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்திருக்கிறது; இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளிலிருந்த 19.92 சதவீதத்திலிருந்து 16.76 சதவீதமாக குறைந்துள்ளது; முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 29.52 சதவீதத்திலிருந்து (1991-2001) 24.60 சதவீதமாக (2001-2011) குறைந்துள்ளது; முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் கடந்த அறுபதாண்டுகளில் இந்த அளவுக்கு சரிந்ததில்லை; ஆனால் இது மோகன் பகவத்துக்கு மகிழ்ச்சியளிக்கப் போதுமானதாக இல்லை. கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 15.5 சதவீதமாக இருக்கிறது; சீக்கியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 8.4 சதவீதமாக இருக்கிறது. 2001-2011இல் கல்வியறிவும் செல்வச் செழிப்பும் மிக்க ஜெயின் மதத்தவரின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக இருக்கிறது. இந்துக்களின் மக்கள் தொகை 3.16 சதவீதம் குறைந்த இந்தக் காலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 4.92 சதவீதம் குறைந்திருக்கிறதென்று பகவத் சந்தோஷமடைந்திருக்க வேண்டும்; ஆனால் அவர் சந்தோஷப்படவில்லை.

இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை கொஞ்சம் வேகமாக வளர்கிறது என்பது உண்மைதான். 1991 சனத்தொகை அறிக்கையின்படி மக்கள் தொகையில் 12.61 சதவீதமாக முஸ்லிம்கள் இருந்தார்கள்; 2001 சனத்தொகை விபரப்படி, 13.8 கோடி முஸ்லிம்கள் (13.4 சதவீதம்) இருந்தார்கள்; 2011 சனத் தொகைப்படி, 17.2 கோடி முஸ்லிம்கள் (14.23 சதவீதம்) இருக்கிறார்கள்; இது கவலைக்குரிய விஷயமா? இந்திய முஸ்லிம்களும் இந்தியர்கள்தானே. இந்த அடிப்படையை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் பேசுகிறது.

இந்துக்களை முஸ்லிம்கள் மிகைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தை ஆர்.எஸ்.எஸ்ஸும் பாரதிய ஜனதா கட்சியும் உருவாக்கி வருகின்றன; இப்போதைய நிலை தொடர்ந்தால் முஸ்லிம்கள் இந்துக்களுக்குச் சமமான எண்ணிக்கையை எட்டுவதற்கு 247 வருடங்களாவது பிடிக்கும். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்தக் கணக்கு தெரியும்; இருந்தாலும் அவர்களது பிரச்சாரத்தை நிறுத்தப்போவதில்லை.

2060க்கு மேல் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் சுணக்கம் ஏற்படுமென்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் பிமாரு பகுதியில் 2091வரை வளர்ச்சி இருக்கும்; பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைத்தான் பிமாரு என்று அழைக்கிறார்கள். அப்போது முஸ்லிம்களின் மக்கள் தொகை 18.8 சதவீதமாக இருக்கும்; பிமாரு பிரதேச மக்கள் தொகை வளரும்போது மற்ற மாநிலங்களின் மக்கள் தொகை குறைவானதாக இருக்கும்; இதன் அரசியல் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாம்; ஆனால் இதைப் பற்றி சங்கப் பரிவாரம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் தொகை வளர்ச்சியுடன் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது; மக்கள் தொகை வளர்வதால் பொருளாதாரம் வளர்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது; சார்ந்து வாழும் வயதினர் குறைவாக இருப்பது மக்கள் தொகைக்குப் பலம் சேர்க்கும்; 0-14 வயதினர், 65+ வயதினர் சார்ந்து வாழ்கிறவர்களாக கருதப்படுகிறார்கள். 15-64 வயதினர் உற்பத்தித் திறன் மிக்க மக்களாக பார்க்கப்படுகிறார்கள்.

2020இல் இந்தியாவில் 15 முதல் 35 வயதுள்ளோர் 27 கோடி பேர் இருப்பார்கள்; இவர்களது உற்பத்தித் திறனும் பொருளாதார பங்களிப்பும் உச்சத்தில் இருக்கும்; 2020இல் கிடைக்கும் இந்த உச்சத்தைச் சரிவர பயன்படுத்தினால் 2050இல் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக நாம் உருவெடுக்க வாய்ப்புள்ளது; அதற்கேற்ப இந்த மக்கள் திரளுக்குக் கற்பித்து வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்; இதுபோன்ற திறன்மிக்க மக்கள் திரண்டு வருவது மறுபடியும் நிகழாது; நமது தலைவர்கள் தேச நலன் கருதாது சொந்த நலன்களையே முன்னிறுத்துவதுதான் கவலைக்குரியது.

சில கவலையளிக்கும் அம்சங்கள் தலைதூக்கியுள்ளன; விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை மளமளவென்று அதிகமாகியுள்ளது; ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கக்கூடிய இவர்களது எண்ணிக்கை 2011இல் 14.43 கோடியாகியுள்ளது; பத்தாண்டுகளில் இது 34.23 சதவீத வளர்ச்சி; நிலமுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 90 லட்சம் குறைந்துள்ளது. தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளின் பின்விளைவுதான் இது. இருபதாண்டுகளில் இரு தரப்பினரும் ஆட்சி செய்துள்ளதால் யாரும் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

முஸ்லிம்கள் இந்துக்களைவிட ஏழைகளாக இருக்கிறார்கள்; ஏழைகளுக்கு அதிக குழந்தைகள் இருக்கின்றன; கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் முஸ்லிம்களின் எழுத்தறிவு இந்துக்களின் எழுத்தறிவைவிட குறைவானதாக இருக்கிறது; எழுத்தறிவில்லாத இந்துப் பெண்களில் 44 சதவீதம் பேர் பணி புரிகிறார்கள்; எழுத்தறிவில்லாத முஸ்லிம் பெண்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஸேஷன் தரும் புள்ளிவிவரப்படி பார்த்தால் வீட்டு வருவாயிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளார்கள்; 2010இல் சீக்கியர்களின் மாத சராசரி வீட்டு வருமானம் 1659 ரூபாய் என்றால் முஸ்லிம்களின் மாத சராசரி வீட்டு வருமானம் 980 ரூபாய்; இந்துக்களின் சராசரி செலவு 1125 ரூபாய்; கிறிஸ்தவர்களின் சராசரி செலவு 1543 ரூபாய்; கிராமப்புறங்களைப் பொறுத்தவரை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை; முஸ்லிம் வீட்டில் மாதாந்தர சராசரி செலவு 833 ரூபாயாகவும் இந்து வீட்டில் 888 ரூபாயாகவும் இருக்கிறது.

ஒரு விஷயத்தில் மட்டும் முஸ்லிம்கள் இந்துக்களைவிட நல்ல நிலையில் உள்ளார்கள்; நமது மக்கள் தொகையில் 60 கோடிக்கு மேலானவர்கள் கழிவறை இல்லாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்; தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே முடிவுப்படி 67 சதவீதம் இந்துக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்; 42 சதவீதம் முஸ்லிம்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்.

இதற்கு சுகாதார பிரதிபலனும் இருக்கிறது; முஸ்லிம் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் மேல் உயிர் வாழ்தலுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; எழுத்தறிவும் வறுமையும் இந்துக்களைவிட முஸ்லிம்களிடம் அதிகமாக இருந்தாலும் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருக்கக் காரணம் சுகாதார அடிப்படைதான்; முஸ்லிம் குழந்தைகளின் இறப்பு வீதம், இந்துக் குழந்தைகளின் இறப்பு வீதத்தைவிட 18 சதவீதம் குறைவாக இருக்கிறது; இந்துக் குழந்தைகளின் இறப்பு வீதத்தைக் குறைத்தால் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துக்கு இணையாக இந்து மக்கள் தொகை வளர முடியும்.

இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது பிரதமரின் ஸ்வச் பாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு கழிவறைகள் கட்டுவதில்தான் இருக்கிறது; ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை எளிதாகிவிட்டது.

(மோகன் குருசாமி பொருளாதார, பாதுகாப்பு ஆய்வாளர்; நன்றி: டெக்கான் கிரானிக்கிள்)

இதையும் படியுங்கள்: ஐந்து பேரில் நான்கு பேர் இந்துக்களாகத்தான் இருப்பார்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்