மக்கள் ஜனநாயக கட்சியும் தேசிய மாநாடு கட்சியும் கைகோர்க்க வேண்டும் – காஷ்மீர் சுயேச்சை உறுப்பினர்

0
203

வடக்கு காஷ்மீரின் லங்கேட் சட்டமன்ற தொகுதியின் சுயேச்சை உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத் வியாழக்கிழமை உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் கரம் கோர்த்து ஆட்சியமைத்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும், இல்லையேல் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

”தேசிய மாநாடு கட்சிக்கும் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் கருத்தியல் ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. அதிகாரமோகத்தினாலும் கர்வத்தினாலும் டெல்லியில் உள்ளோரின் சொல்லுக்கு இணங்கி ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றனர். தங்களது வறட்டு கவுரவத்தை விடுத்து இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும். பழைய கசப்புகளை
மறந்து ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லியில் இருப்பவர்களின் கைப்பாவையாக இருந்த நிலையை மாற்றி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.” என பத்திரிகையாளர்களிடம் ரஷீத் கூறினார்.

இரு கட்சிகளும் இணைவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை கூட்ட முடியும் என கூறினார் .

” இரண்டு கட்சிகளும் இணைவது என்பது , இருகட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கையை மீட்டெடுத்து மக்களிடையே இக்கட்சிகளுடைய செல்வாக்கை உயர்த்தும். கட்சி சாராத, எந்த அவையிலும் பதவி வகிக்காத முக்கிய ஆளுமை ஒருவரை
இருகட்சிகளும் இணைந்து முதல்வர் வேட்பாளராக நியமிக்கலாம். தேசிய மாநாடு கட்சியும் மக்கள் ஜன்நாயக கட்சியும் பதவிக்காக நாடகமாடவில்லை என காஷ்மீரிகளுக்கு இது உணர்த்தும். காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் இக்கட்சிகளுக்குள்ள அக்கறையை உணர்த்தும். மறைந்த ஷேக் முகமது அப்துல்லா முதல் மெஹ்பூபா முஃப்தி வரையிலான காஷ்மீர் தலைவர்களை டெல்லியில் இருப்பவர்கள் இழிவுபடுத்தமுடியாது என்பதை இந்நேரத்தில் அவர்களுக்கு புரியவைக்கும்” என்றார் ரஷீத்.

இந்த யோசனை குறித்து பேச மக்கள் ஜன்நாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா ஆகிய இருவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக ரஷீத் கூறினார்.

தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜன்நாயக கட்சி கைகோர்ப்பதை டெல்லி தடுக்க நினைத்தால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணிக்கவேண்டும்” என்றார்.

மேலும், மக்கள் மக்கள் ஜன்நாயக கட்சி-பாஜக. கூட்டணியை விரும்பியதாகவும் ஆனால் தற்போது பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது ஒழுக்கக்கேடானது, கண்டனத்துக்குறியது என்று கூறினார்.

Courtesy : Times Of India

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்