சமூக ஊடக மையம் ஒன்றை உருவாக்கி , மக்களைப் பற்றி தகவல்கள் சேகரித்து பொது மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருகிறதா மத்திய அரசு என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மவா மொய்த்ரா. இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் பொதுமக்கள் பகிரும் தகவல்களை, கண்காணித்து, சேகரித்து அது குறித்து ஆய்வு செய்வதற்காக, ‘சமூக ஊடக மையம்’ ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் , மத்திய அரசு இந்த சமூக ஊடக மையத்தில் கண்காணிப்பு பணிகளுக்கு என்று சமீபத்தில் மென்பொருள் ஒன்றினை வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதையும், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளதையும் தெரிவித்தார்.

பொதுமக்களின் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் , இன்ஸ்டகிராம் தகவல்கள் மீது ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த நாட்டை கண்காணிப்பின் கீழ் கொண்டு வர நினைப்பது போல் தெரிகிறது .

எனவே சமூக ஊடக மையம் தொடர்பான டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கினை ஒத்தி வைக்கிறோம். அன்று இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here