”மக்களே, எம்.எல்.ஏ சம்பளத்த எப்ப ஏத்தப் போறீங்க?”

0
746

தமிழ்நாட்டில் மே 16 ஆம் தேதி எம்.எல்.ஏ தேர்தல் நடக்கிறது; தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்களுக்கு 55,000 ரூபாய் சம்பளமும் ஹாஸ்டல் வசதி, போக்குவரத்துச் சலுகைகளும் இருக்கின்றன. பல நேரங்களில் இது போதுமான சம்பாத்தியம் இல்லை என்று எம்.எல்.ஏக்களில் பலரும் தொகுதிகளுக்குள்ளே வரும் மணல் லாரிகளிடம் கமிஷன் வாங்குகிறார்கள்; தொகுதிகளுக்குள் இருக்கும் ஆலைகளில் வசூல் செய்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஊழலற்ற அரசாங்கம் அமைக்கப் பிரயத்தனப்பட்டபோது எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் குறைவாக இருந்ததைக் கண்டுபிடித்தது. 88,000 ரூபாயாக இருந்த மாதச் சம்பளத்தை இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தியது.

டெல்லி அரசாங்கத்தைப் பார்த்து கே.சந்திரசேகர ராவின் தெலுங்கானா அரசாங்கம் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை 95,000லிருந்து இரண்டு லட்சத்து பத்தாயிரமாக உயர்த்தியது. தமிழக சட்டப்பேரவையில் பல முறை எம்.எல்.ஏக்கள் தங்களுக்குச் சம்பள உயர்வு கேட்டுக் குரல் எழுப்பியுள்ளார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011இல்தான் 55,000 ரூபாய் அளவுக்குச் சம்பளத்தை உயர்த்தியுள்ளோம்; இதை இன்னும் அதிகமாக்கினால் சாதாரண மக்களுக்கு எம்.எல்.ஏக்கள் மீது கோபம் வந்துவிடும் என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. தெலுங்கானாவில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது மக்கள் பிரதிநிதிகள் இவ்வளவு பெரிய சம்பள உயர்வைப் பெறலாமா என்கிற கடும் விமர்சனம் ஊடகங்களாலேயே எழுப்பப்பட்டது.

வாழத்தக்க ஊதியம் இருந்தால் அடுத்தவர்களிடம் கைநீட்டிக் காசு வாங்குவதற்கான தூண்டுதல் இருக்காது என்கிற கோணத்திலும் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும். எம்.எல்.ஏக்களின், பொதுவாழ்வில் இருப்பவர்களின் பணத்தேவைகளைப் பற்றிப் பேசாமல் வெளிப்படைத்தன்மையுள்ள நிர்வாகத்தை, நல்லாட்சியை உறுதி செய்ய முடியாது. பொதுவாழ்வில் இருப்பவர்களின் பொருளாதாரத் தேவைகளைப் பற்றியும் அதனை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் பேசாமல் பொதுவாழ்வில் தூய்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது. எம்.எல்.ஏக்களின் வாழத்தக்க ஊதியம் குறித்து தமிழ்நாட்டிலும் வெளிப்படையான, ஆரோக்கியமான உரையாடல் தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்