மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி, பேச்சுவார்த்தை, அரசியல் கட்சியினர் சந்திப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவை கண்டிப்பாக வீழ்த்தியாக வேண்டுமென்ற முனைப்போடு காங்கிரஸ் செயல்பாடுகளை துரிதப்படுத்தி வருகிறது. 

இதனிடையே மக்களவை தேர்தல் நடத்துவது குறித்து கடந்த 3 மாதங்களாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தேதிகள், எத்தனை கட்டங்களாக நடத்துவது என முடிவு செய்வதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களையும் டெல்லிக்கு அழைத்து தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைய உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது தேர்தல் குறித்த விஷயங்களை வெளியிடுவதில்லை என்பது மரபு. 2004 ஆம் ஆண்டு 4 கட்டமாகவும், 2009 ஆம் ஆண்டு 5 கட்டமாகவும், 2014 ஆம் ஆண்டு 9 கட்டமாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆந்திரா, சிக்கிம், ஒடிஷா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின்  சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்