முத்தலாக் நடைமுறை தடை மசோதா மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

முத்தலாத் நடைமுறை தடை மசோதா மீது இன்று விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், 5 நாள் விடுமுறைக்குப் பின் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடியது. அப்போது, முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “முத்தலாக் தடை மசோதா எந்த மதத்தினருக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. பெண்களின் நலன் கருதியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

ரவிசங்கர் பிரசாத் பேச்சைத் தொடரவிடாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், “மத நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது. இந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

ஏஐஎம்ஐஎம் கட்சி உறுப்பினர் ஒவைசி பேசும்போது, “சம்பந்தப்பட்டவர்களுடன் முத்தலாக் மசோதா குறித்து விவாதிக்கப்படவில்லை. இந்த மசோதாவை சிறப்புத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

அதிமுக எம்பி அன்வர் ராஜா கூறுகையில், “இஸ்லாமிய தனி நபர் சட்டத்தில் இந்த மசோதா நேரடியாக தலையிடுகிறது” என்றார்.

இதையடுத்து, இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில், மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால், மசோதா மீதான வாக்கெடுப்பின் போது காங்கிரஸ், அதிமுக எம்பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு 245 உறுப்பினர்கள் ஆதரித்தும், 11 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதன்மூலம், முத்தலாக் நடைமுறை தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் நடைமுறை, சட்டவிரோதம், அது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோதிலும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் அதை தொடர்ந்து பின்பற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த நடைமுறையை சட்டப்பூர்வமாக தடை செய்யும் வகையில், அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தில், முத்தலாக் நடைமுறையானது சட்டவிரோதம், அதை கடைப்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, நாடாளுமன்றத்தில் புதிய முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கடந்த 17ஆம் தேதி கொண்டு வந்தது. முன்னதாக, இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திருத்தங்களுடன், மக்களவையில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அவசர சட்டம் 6 மாதத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதற்குள் அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதன்படி இன்னும் 42 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அதை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here