அதிகாலை மூன்று மணி. நம்மில் பலரும் பாதி தூக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால், இவ்வளவு காலையில் எழுந்து வேலை செய்தால் மட்டுமே தங்கள் குடும்பத்தை நடத்த முடியும் என்கிறார்கள் நெய்தல் நிலத்து மீனவப் பெண்கள்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்றும், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.

முதலாவதாக கடலூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு சில மீனவப் பெண்களை சந்தித்தோம். அம்மாவட்டத்தின் மஞ்சக்குப்பத்தில் உள்ள லாஞ்ஜரி என்ற இடத்துக்குப் போகும்போது அதிகாலை நான்கு மணி.

இந்தியாவில் மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2017-18ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 7.12 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரையின் நீளம் – 1,076 கிலோ மீட்டர்

கடற்கரை மாவட்டங்கள் – 13

மீனவ கிராமங்கள் – 608

மீனவ மக்கள் தொகை – 10.07* லட்சம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் அவ்வளவு அதிகாலையில் காகம் கூட எழுந்து கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் லாஞ்ஜரியில் அவ்வளவு கூட்டம். முக்கியமாக பெண்கள்தான் அதிகளவில் இருந்தார்கள். கடலில் பிடிக்கும் மீன்கள் இங்குதான் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

“கடலுக்கு சென்று மீன்களை கொண்டுவருவது என்னமோ ஆண்களாக இருந்தாலும், அதற்கு பிறகு செய்யும் அனைத்து வேலைகளும் பெண்களை சார்ந்தே இருக்கிறது” என்கிறார் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அங்கு வந்திருந்த பஞ்சவர்ணம். இவர் அங்கிருந்து மீன் வாங்கிக் கொண்டு அருகில் உள்ள தன் கிராமத்துக்கு எடுத்துச் சென்று விற்கிறார்.

முந்தைய நாள் மாலை மீன் பிடிக்க சென்ற கலங்கள், அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு லாஞ்சரிக்கு வரும். மீன்களை எடை போட்டு ஏலம் விடும் இடம் முழுக்க கூச்சலும் குழப்பமும் விவாதங்களும் நிறைந்திருக்கின்றன.

மீன்களை ஏலத்தில் வாங்கி அதனை சுத்தப்படுத்தி, வெட்டி விற்பதில் இருந்து, அல்லது அவற்றை உப்புக்கண்டம் போட்டு வெயிலில் காய வைத்து கருவாடாக்கி விற்பது வரை இங்கு அனைத்தும் பெண்கள்தான். இதோடு வீட்டில் குடும்பத்தையும் இவர்களே சமாளிக்கிறார்கள்.

“என் வீடு இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் இங்கு வந்துவிடுவோம். நடந்துதான் வருவோம். வீட்டிற்கு திரும்பி செல்ல மாலை ஏழு மணியாகிவிடும். சரியான தூக்கம் கிடையாது. கைக்கால்கள் எல்லாம் குடைச்சல் எடுக்கும். படுத்தால் எழுந்திருக்க முடியாது. எனினும், இதெல்லாம் பிள்ளைகளுக்காகத்தான்” என்கிறார் மீன் விற்கும் தொழில் செய்துவரும் ஜோதி.

வரவிருக்கும் தேர்தலையடுத்து பதவியேற்கவுள்ள புதிய பிரதமரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதிலேதும் சொல்லாத ஜோதி, “இதுவரைக்கும் என்ன செஞ்சாங்க? எதுவும் செய்யலையே. உங்களுக்கு என்ன செய்யனும்னு கேக்கறாங்க. ஆனா ஒன்னும் செய்ய மாட்டாங்க” என்று மீன் அரிந்துக்கொண்டே நம்மிடம் கூறுகிறார்.

ஜோதி அரிவாள்மனையில் மீனை வெட்டி உப்பில் போட்டுக் கொண்டிருந்தார். மேலும், அங்கிருந்த தரையில், வேறு சிலர் கருவாட்டை பரப்பி காயவைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதியின் கணவரும் மீன் தொழிலில்தான் இருக்கிறார். அவரது மகனும் கருவாட்டை பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக ஜோதி கூறினார்.

“வரும் வருமானம் சாப்பாட்டுக்கு மட்டும்தான். அத வெச்சு வேற ஒன்னும் பண்ண முடியாது” என்கிறார் அவர்.

ஒன்பது ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கும் வத்சலா, தன் வாழ்வில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார். “எங்களுக்கு ஏதோ செய்யறோம்னு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டெல்லாம் வாங்கிட்டு போனாங்க. தோ, ஒரு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் எதுவுமே செய்யல. நாங்க சம்பாதிச்சு குழந்தைகளை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படறோம். எங்களுக்கு கடனும் குடுக்க மாட்டேங்கறாங்க. அரசு ஏதாவது கடனுதவி செய்தால் புண்ணியமாக போகும்” என்கிறார்.

“பாதி வருமானம் வயிற்றுக்கும், மீதி வருமானம் பிள்ளைகளை படிக்க வைக்கவுமே சரியாக இருக்கிறது. நாங்களும் எங்களின் வாழ்வில் முன்னேற எவ்வளவோ முயற்சி செய்கிறோம். எங்களிடம் அதிக உழைப்பு இருக்கிறது. ஆனாலும், முன்னேற முடியவில்லை”

“அதிகாலை ஒரு மணிக்கும், மூன்று மணிக்கும் இங்க வந்து மீன்கள வாங்க படாதபாடு படுவோம். ரொம்ப கஷ்டப்படுவோம். கேக்கற காசில்லைன்னா, மீன் வாங்கற எடத்துல மரியாதையாகூட நடத்த மாட்டங்க” என்று சோகத்துடன் கூறுகிறார் வத்சலா.

இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அருகில் உள்ள இடத்தை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்ணை பார்த்தோம். அவர் பெயர் சின்னப்பிள்ளை. அவருக்கு அவருடைய வயது என்ன என்று தெரியவில்லை.

அவரது கணவர், சிறு வயதிலேயே அவரை கைவிட்டுச் சென்றுவிட்டதாகவும், தற்போது அவர் உயிருடனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“காலைல சீக்கரமே வேலைக்கு வந்துருவேன். முடியலைனா இங்கயே படுத்துக்குவேன். அப்பறம் எழுந்து திரும்பியும் எடத்த பெருக்குவேன். மீன்கள இங்க கொண்டாந்து போட்டா காய வைப்பேன்.”

மத்திய அரசிடம் வைக்க ஏதேனும் கோரிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு “தெரியவில்லை” என்று கூறிவிட்டார் சின்னப்பிள்ளை. “எனக்கு முதியோர் பணமோ, விதவைத் தொகையோ எதுவும் வரல. நிறைய வாட்டி எழுதி கொடுத்துட்டேன், நிறைய அலைஞ்சேன், ஆனா எனக்கு யாரும் உதவ செய்யல” என்று கண்ணீருடன் நம்மிடம் தெரிவித்தார்.

“என் பேரன் பேத்தியெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போனாங்க. அப்பறம் படிக்க வைக்க காசில்ல. நிறுத்தியாச்சு. சில நாளைக்கு நிறைய வேலை இருக்கும். அன்னிக்கு 250 ரூபா வரைக்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு வேலையே இருக்காது. 50 – 60 வருஷமா இங்கதான் இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போறோம்…” என்கிறார் அவர்.

கடலூர் மாவட்டத்தின் சொத்திக்குத்து கிராமத்தை சேர்ந்த வேதநாயகி, ஹார்பருக்கு ஒன்பது ஆண்டுகளாக வந்து செல்கிறார்.

“சுனாமிக்கு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மீன்வளம் எல்லா அழிஞ்சு போச்சு. வட்டிக்கு வாங்கி சுருக்கு வலை போட்டோம். ஆனா, அரசாங்கம் சுருக்கு வலைய தடை பண்ணிட்டாங்க. எங்களுக்கு யாரும் சொத்துல்லாம் சேத்து வெச்சுட்டு போகல. கடல்தான் எங்களுக்கு தெய்வம். வேறெதுவும் தெரியாது”.

சுருக்கு வலை என்றால் என்ன? அதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?

டன் கணக்கில் மொத்தமாக மீன்களை பிடிக்க சுருக்கு வலை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மீன்பிடி முறையாகும்.

இந்திய இலங்கை மீனவர்கள் இடையே பிரச்சனை நிலவுவதற்கு சுருக்கு வலை விவகாரமும் ஒரு முக்கிய காரணமாகும்.

இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, சிறிய படகுகளில் மீன்பிடிக்க செல்வோருக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாதாரண வலையில் பெரும்பாலும் மீன்கள் மட்டுமே பிடிபடும். ஆனால், சுருக்கு வலை பயன்படுத்தும்போது கொத்து கொத்தாக மீன்களோடு, மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளும் பிடிபடுவதால், இந்த வலையினால், அப்பகுதியின் மீன்வளம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

“கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வெச்சேன். ஆனா, மீனவ சமூகத்துக்கு எங்க வேலை தராங்க. அவங்க வேலை இல்லாமதான் இருக்காங்க.

சம்பாதிக்கற காசெல்லாம் வட்டி கட்டத்தான போகுது. ஒரு படகுக்கு 10 லட்சம்னு வெச்சாக்கூட, 4 பைசா, 5 பைசா அல்லது தினவட்டிக்குகூட வாங்கறோம். ஆனா, எங்களால கட்ட முடியல. அதுவும் கடந்த 3 வருஷமா கடல்ல வருமானமே இல்லாம போயிடுச்சி. அதுக்கு முன்னாடி கொஞ்சம் பரவால்லையா இருந்தது.

தானே புயல்ல ரொம்ப பாதிக்கப்பட்டோம். அதிலேருந்து வெளிவரத்துக்கே ரொம்ப காலம் ஆயிடுச்சி. அரசாங்கம் பெருசா எதுவும் செய்யாது. 50 ஆயிரம் இழப்புனா அரசு ஐயாயிரம் இல்ல… பத்தாயிரம் கொடுக்கும். எங்களோட உழைப்பு, அதோட கடன் வாங்கறதுலதான் காலத்த தள்றோம். சொத்து சொகமும் கிடையாது. சேமிப்பும் கிடையாது.

சில படகுகளுக்குதான் டீசல் மானியம் இருக்குது. எல்லாத்துக்கும்லாம் தரமாட்டாங்க. என்ன செஞ்சாங்க? வருவாங்க. ஓட்டு வாங்குவாங்க. ஆனா ஒன்னு, அரசாங்கம் எங்களுக்கு துறைமுகம் கட்டி கொடுத்திருக்காங்க. வலை பொத்தற்துக்கு கூடம் கட்டி கொடுத்துருக்காங்க.

இங்க வேலை செய்ற பெண்களால வட்டிக்கு வாங்கி சமாளிக்க முடியல. விவசாயிகளுக்கு கொடுக்கறது மாதிரி மீனவர்களுக்கு அரசாங்கம் கடன் தரனும்னு கேட்டுக்கிறோம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மீனவப் பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்

மீனவர்களுக்கான மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி மாநில அரசு மீனவப் பெண்களுக்கு இத்திட்டம் கொண்டுவந்தது.

2017 – 18ஆம் ஆண்டு பட்ஜெட்டில், 1,98,833 மீனவப் பெண்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பலன் வழங்குவதற்காக ரூ.59.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தமிழக மீனவத்துறையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 1,98,783 மீனவப் பெண்களுக்கு,இத் தொகையில் 59.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் 2018 – 2019 ஆண்டிலும் தொடரும்.

இவர்கள் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து லாஞ்சரிக்கு வந்து, அங்கிருக்கும் ஓலை வீடுகளில்தான் தங்குகிறார்கள். அது அவர்களே கட்டிக் கொண்டது. மீன் அறுக்கவும், கருவாட்டை காய போடவும், பகலில் சமைத்து சாப்பிடவும் செய்கிறார்கள்.

இந்த வீடுகளில் எல்லாம் மின்வசதி கிடையாது. இப்பெண்களிடம் சாதா கைபேசி இருக்கிறது. ஆனால், வாட்சாப் குறித்தெல்லாம் பலருக்கும் தெரியவில்லை.

சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டில், தனியே மீன்வளத்துறை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்தும் அவர்களுக்குப் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

அதுவும் சில பெண்களுக்கு அவர்களுக்கான உரிமை என்ன, டெல்லியில் என்ன நடக்கிறது, அவர்களுக்கு வரவேண்டிய சலுகைகள் என்ன என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தேவையெல்லாம் அடுத்த வேளை உணவும், பிள்ளைகளின் எதிர்காலமும், வட்டி கட்ட அவசியமில்லாத வாழ்க்கையும்தான்.

Courtesy : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here