மக்களவைத் தேர்தல் ; 117 தொகுதிகளில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

0
173

மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளில்  வாக்குப்பதிவு துவங்கியது. 
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைக்கு முதல்கட்டமாக கடந்த 11ஆம் தேதியும், 2ஆவது கட்டமாக கடந்த 18ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றன. 2ஆவது கட்டத் தேர்தலின்போது, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை  காரணமாக செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்.23) ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொகுதியுடன் சேர்த்து, 3ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த 116 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு துவங்கியுள்ளது இதேபோல், கோவா (2), அஸ்ஸாம் (4), பிகார் (5), சத்தீஸ்கர் (7), ஜம்மு-காஷ்மீர் (1), திரிபுரா (1), கர்நாடகம் (14), மகாராஷ்டிரம் (14), ஒடிஸா (6), உத்தரப் பிரதேசம் (10), மேற்கு வங்கம் (5) ஆகிய மாநிலங்கள், தாத்ரா- நாகர் ஹவேலி (1) டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.


3ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா (காந்திநகர்), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (வயநாடு), சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் (மைன்புரி), காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (குல்பர்கா), முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் (திருவனந்தபுரம்), சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம்கான், நடிகை ஜெயப் பிரதா (ராம்பூர்), மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் (பைரேலி), மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி (பிலிபித்), தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகன் சுப்ரியா சூலே (பாராமதி) ஆகியோர் முக்கியமானவர்கள்.

 மக்களவை 3ஆம் கட்டத் தேர்தலுடன் சேர்த்து,  சில மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் உள்ள ஜாம்நகர் (ரூரல்), உன்ஜா, மனவதார், திராங்க்தரா ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள சிரோடா, மபுசா, மாந்த்ரேம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  அதன்படி, ஒடிஸா சட்டப் பேரவையில் உள்ள 42 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு துவங்கியுள்ளது
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here