தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றியை எதிர்க்கும் வாக்காளர் சந்தானக்குமாரின் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

தூத்துக்குடி மக்களவை தேர்தல் கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவை நிராகரிக்கக் கோரிய கனிமொழியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசையும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். தேர்தல் முடிவுகளில் கனிமொழி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை தோல்வியடைந்தார்.

இதையடுத்து, கனிமொழியின் வேட்புமனுவில் அவரது கணவரின் சொத்து விவரங்கள் குறிப்பிடவில்லை. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போதே அது குறித்து தனது தரப்பில் ஆட்சேபனை தெரிவித்த போதும் தேர்தல் அதிகாரி அதனை ஏற்கவில்லை. எனவே, கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி தமிழிசை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கும், கனிமொழிக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதும் கனிமொழிக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை தமிழிசை திரும்பப் பெர்றுக்கொண்டார். அதேசமயம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றியை எதிர்க்கும் வாக்காளர் சந்தானக்குமாரின் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here