தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று(வியாழக்கிழமை) தடைவிதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் :

கடந்த 2009 இல் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வரை அரசியல் கட்சியினரால் கொடுக்கப்பட்டது.

இதேபோன்று 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குக்கு பணம் வழங்கியது தொடர்பாக 3,742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.27.93 கோடி கைப்பற்றப்பட்டது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பணம் பெறுவதும், பணம் கொடுப்பதும் குற்றம் என அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதிகளவில் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தலுக்காகச் செலவு செய்யப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கத் தடைவிதித்தனர்.

மேலும் பிரசாரப் பொதுக் கூட்டத்திற்கு லாரி, வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வரவும் தடை விதித்தனர்.

இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here