மகாராஷ்டிர மாநிலத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருள்கள் வைத்திருந்த குற்றத்துக்காக வலது சாரி அமைப்பைச் சேர்ந்த 3 பேரை தீவிரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

புனே, சத்தாரா, மும்பை, நல்லஸ்போரா ஆகிய இடங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை நிறைவேற்ற திட்டமிட்டதற்காகவும், வெடிபொருள்கள் வைத்திருந்த குற்றத்துக்காகவும் சரத் கலஸ்கர், கோந்த்லேகர், வைபவ் ரௌத் ஆகியோரை தீவிரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொலை வழக்குகளில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

பால்கர் மாவட்டம், நல்லஸ்போரா பகுதியை சேர்ந்தவர் வைபவ் ரெளத். அவர் இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பந்தர் அலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்பு படையினர் சோதனை நடத்தியபோது வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருள்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. வெடிபொருள்கள் பதுக்கிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை விசாரணைக்காக தீவிரவாத தடுப்பு படையினர் மும்பை அழைத்து சென்றுள்ளனர்

பசுக்களை பாதுகாக்கும் இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி’ அமைப்பில் உள்ள வைபவ் ரெளத் பசுக்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறவர். ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்களை பொய்யான வழக்கில் கைது செய்வது இது முதல்முறை அல்ல. மாலேகான் வழக்குக்காக சனாதான் சான்ஸ்தா’ என்ற அமைப்பை சேர்ந்த அப்பாவிகளை கைது செய்தார்கள் . இந்த கைது மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் தொடர்ச்சியோ என்று சந்தேகமாக உள்ளது ‘ என்று ரெளத்தின் கைது குறித்து இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி அமைப்பின் சுனில் கன்வாத் கூறினார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நாசிக் மாவட்டத்தில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாலேகான் பகுதியில் குண்டு வெடித்தது. அந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் காயமடைந்தனர் .

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்