மகாராஷ்டிரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி, மராத்தா சமூகத்தினர் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நடக்கும் இந்தப் போராட்டத்திலிருந்து நவி மும்பைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அடிப்படை சேவை வழங்கும் அமைப்புகளுக்கு இந்தப் போராட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் அமைதியான முறையில் நடைபெறும் என்று மராத்திய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது பற்றி தனது அரசாங்கம் தீவிரமான ஆலோசனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் வரை இந்த பிரச்னையை சரி செய்ய அவர் கால அவகாசம் கேட்டுள்ளார்.

மராத்திய இளைஞர்களுக்கு நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். வன்முறையில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும். நாங்கள் எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்னையிலும் ஈடுபட மாட்டோம்’ என்று போராட்டத்தை முன்னின்று நடத்தும் மராத்திய அமைப்புகள் தெரிவித்துள்ளன.காரணம், கடந்த மாதம் அங்கு நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் மரணமடைந்தார். பல போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்து வருகிறது.

மும்பை உயர் நீதிமன்றம் மராத்திய அமைப்புகளுக்கு, ‘யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் செல்வாக்கு பெற்றுள்ள மராத்தியர்கள், 16 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு வெகு நாட்களாக போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, போராட்டக்காரர் ஒருவர் கோதாவரி நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தான் போராட்டத்தில் வன்முறை அதிகமானது.

ஜூலை 18 முதல் 27 வரை, மராத்திய போராட்டம் சம்பந்தமாக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்