மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உதவினால் மகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக மோடி வாக்குறுதி தந்தார் – சரத் பவார்

0
262

பிரதமர் நரேந்திர மோடி  பாஜகவுடன் கூட்டணி வையுங்கள் வைத்தால் தனது மகள் சுப்ரியா சூலேவுக்கு அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த அழைப்பை தான் நிராகரித்து விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒரு மராத்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மோடியின் அழைப்பை நிராகரித்துவிட்டு தான் உத்தவ் தாக்கரேயுடனும் காங்கிரசுடனும் கூட்டணி வைத்ததாக அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியளித்தார். அதில் தனிப்பட்ட முறையில் மோடிக்கும் எனக்கும்  இடையிலான நட்புறவு நன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற முடியாது என பிரதமர் நரேந்திர மோடியிடம் தாம் தெரிவித்ததாக அவர் கூறினார். 

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உதவினால், குடியரசுத் தலைவர் பதவி வழங்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்திருந்ததாக வெளியான தகவலை மறுத்த சரத் பவார், மத்திய அமைச்சரவையில் தனது மகளான சுப்ரியா சூலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முன் வந்தார் எனவும் தெரிவித்தார். 

மேலும் மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தைப் பொறுத்த வரையில், தேவேந்திர பட்னாவீசுக்கு அஜித் பவார் ஆதரவளித்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல் நபராக உத்தவ் தாக்கரேவை தொடர்புகொண்டு பேசினேன். அஜித் பவாரின் நடவடிக்கை சரியானது அல்ல என்றும், அவர் தரப்பில் எழுந்துள்ள எதிர்ப்பை முறியடிப்பேன் என்றும் உத்தவ் தாக்கரேவுக்கு நம்பிக்கை அளித்தேன்.

அஜித் பவாரின் செயலுக்கு நான் ஆதரவு தரவில்லை என்று தேசியவாத காங்கிரஸாருக்கு தெரியவந்த பிறகு, அவரோடு சென்ற 5-10 எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. பட்னாவிசுக்கு  ஆதரவளித்த முடிவை பரிசீலனை செய்யுமாறு எங்கள் குடும்பத்திலிருந்து எவரும் அஜித் பவாரிடம் பேசினார்களா எனத் தெரியாது. ஆனால், அஜித் பவார் செய்தது சரியல்ல என்பதை குடும்பத்தில் உள்ள அனைவருமே உணர்ந்தோம்.

பின்னர் அஜித் பவார் மீண்டும் எங்களுடன் இணைந்தபோது, அவர் பாஜகவுக்கு ஆதரவளித்த செயல் மன்னிக்க முடியாதது என்று அவரிடமே கூறினேன். 

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றபோது, அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்க வேண்டாம் என யோசித்து தான் முடிவு செய்யப்பட்டது என்றார். 

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தபோது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். விவசாயிகளின் நலனுக்குக்காக நிதி ஒதுக்க மோடியிடம் கோரிக்கை வைத்ததாக சரத் பவார் அப்போது கூறியிருந்தார். பின்பு அவசர அவசரமாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பதற்குமுன் விவசாயிகள் நலனுக்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. 

சரத் பவாரை சந்தித்த பின் மாநிலங்களவையின் 250வது சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது , நாடாளுமன்ற மரபுகளை மீறாமல் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் நடந்து வருவதாக புகழ்ந்திருந்தார் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here