மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஊரக மற்றும் நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறித்த நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில் போதுமான கடன் கிடைக்க வழிவகை செய்ய கடந்த 2018-19 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற இலக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கினையும் விஞ்சி 11 ஆயிரத்து 449 

கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். 

நடப்பாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2. தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டம், நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நடப்பாண்டு முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 210.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும்
திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். இவ்வாண்டு இத்திட்டத்திற்கு 40.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

வட்டார அளவில் மேம்படுத்தப்பட்ட வலுவான கூட்டமைப்பை உருவாக்குதல், இணையவழி நிதி பறிமாற்றம், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை
சாராத பிரிவுகளில் தனிநபர் மற்றும் கூட்டு தொழிலுக்கான வணிக மேம்பாட்டினை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
3. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கிராம மற்றும் நகர்ப்புர இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக, நடப்பு ஆண்டில் 125 கோடி ரூபாய் செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும்.

4. பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகிய இரண்டு மண்டல ஊரக வங்கிகள் 1.4.2019 அன்று ஒருங்கிணையது, மாநிலம் முழுவதும்
630 கிளைகளைக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் சேலத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இதற்கென தமிழ்நாடு கிராம
வங்கியும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் ஒருங்கிணைந்த ஒரு வளாகம் அமைக்க சேலத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்படும்.

இவ்வளாகம், வாழ்க்கைத் தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரு மையமாக செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here