தெலுங்கிலும் ஜெnலிக்கும் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ்
நாயகி மையப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தமன்னா. தமிழில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் பெட்ரோமாக்ஸ் படம் ஒரு நாயகி மையப் படமாகும். ஹாரர் படமான இது தெலுங்கு படமொன்றின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால், இல்லை. காரணம் பெட்ரோமாக்ஸை தெலுங்கில் ‘டப்’ செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்றால் தெலுங்கில் ‘டப்’ செய்ய மாட்டார்கள் அல்லவா?
மகனை கூச்சப்பட வைத்த விக்ரம்
விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் மொத்த படப்பிடிப்பும் சில தினங்கள் முன்பு நிறைவடைந்தது. படத்துக்கு துருவ் டப்பிங் பேசிய போது, திடீரென விக்ரம் அங்கு சென்றுள்ளார். அப்பாவைப் பார்த்ததும் மகனுக்கு கூச்சத்தில் பேச்சு வரவில்லை. அப்படியெல்லாம் கூச்சப்பட்டா ஆகாது, என்னை அப்பாவாகப் பார்க்காதே, அசிஸ்டெண்ட் டைரக்டரா பாரு என்று விக்ரம் அறிவுரைகூறி துருவின் கூச்சத்தைப் போக்கியுள்ளார். அதன் பிறகு கூச்சம் விலகி அப்பா முன்பு டப்பிங் பேசியுள்ளார் துருவ்.
தமிழ்ப்படம் தயாரிக்கும் ராணா
பாகுபலி வில்லன் ராணா டகுபதி தமிழில் ஒரு படம் தயாரிக்கிறார். இது நானி நடித்த தெலுங்குப் படம் ஜெர்ஸியின் ரீமேக்காகும். இந்த ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிப்பதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல் சமந்தா நடித்த தெலுங்குப் படம் ஓ பேபி படத்தை அலியா பட் நடிப்பில் இந்தியில் ராணா ரீமேக் செய்கிறhர். மேலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். நடிப்பைவிட இப்போது படத்தயாரிப்பில்தான் ராணா அதிக கவனம் செலுத்துகிறார்.
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள்
சைத்தான், டேவிட் உள்பட சில படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். சைத்தான் வெளியான போது இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக வளர்வார் என பலரும் கணித்தனர். ஆனால், அடுத்தடுத்த படங்கள் சரியாகப் போகாமல் இன்னும் குடத்திலிட்ட விளக்கு போலவே இருக்கிறார். இவர் இயக்கும் அடுத்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நாயகி. இஷான் கட்டார் நாயகன். ரொமான்டிக் த்ரில்லராக இந்தப் படம் தயாராகிறது.