மகனுக்கு சீட் தரவில்லை என்றால் கட்சியிலிருந்து விலகுவேன் -ப.சிதம்பரத்திடம் கோபப்பட்ட ராகுல் காந்தி?

0
1325

சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு முன்னர் ராகுல், நான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார். ஆனால், அவரது ராஜினாமாவை காங்கிரஸ் செயற்குழு ஏற்கவில்லை. இதை உறுதி செய்யும் விதத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் ‘காங்கிரஸ் தலைவர்’ என்ற விளக்கம் அப்படியே இருக்கிறது. 

தற்போதைய சூழலில் ராகுல், கட்சித் தலைவர் பதவியை “விட்டுத் தரப்போவதில்லை” என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்து  உள்ளதாகவும் தெரிகிறது. 

ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. “இது மாற்றத்துக்கான நேரம்” என்பதை இருவரும் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. 

அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்’ என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.

சனிக்கிழமை நடந்த செயற்குழு சந்திப்பின்போது ராகுல், கட்சிக்காரர்கள் மத்தியில் மிகவும் கறாராக பேசினார். அவர் யாரையும் குறிப்பிடாமல், “கட்சி வெற்றி பெறுவதைவிட, தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் தங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என்றும் நினைத்தார்கள். இது பெரும் பின்னடைவாக அமைந்தது” என்று ராகுல் விரிவாக பேசியுள்ளார். 

ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி 3 மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் ஆகியோர் தங்களின் மகன்களுக்கு எம்.பி.சீட் கேட்டு அதிகமான நெருக்கடி அளித்தார்கள். கட்சியின் நலனைக் காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை செலுத்தினார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், கமல்நாத் மகன் நகுல் ஆகியோர் மட்டுமே வென்றனர். கெலாட்டின் மகன் வைபவ் தோல்வி அடைந்தார்.

ஜோதிர்தியா சிந்தியா பேசுகையில், மாநிலத் தலைவர்களை வலுப்படுத் வேண்டும் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டபோது, கோபப்பட்ட ராகுல் காந்தி, சிதம்பரத்தைப் பார்த்து,” தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று மிரட்டல் விடுத்தார்” . கமல்நாத்தும் தன் மகனுக்கு சீட் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மகன் போட்டொயிடும் ஜோத்பூர் தொகுதிக்காக ஒரு வாரம் செலவழித்ததும், மற்ற தொகுதிகளை கண்டுக்காமல் விட்டது பற்றியும் ராகுல் காந்தி கோபப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியும் தான் பிரச்சாரத்துக்குச் சென்றபோது மூத்த தலைவர்கள் எத்தனைபேர் தனக்கு உதவியாக, ஆதரவாக  வந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை நான் வைத்தபோது, இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் எத்தனை தலைவர்கள்  எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். சிலர் கையைத் தூக்கி நான் ரஃபேல் ஊழல் குறித்துப் பேசினேன் என்று கூறியபோது அதைக் காட்டமாக ராகுல் நிராகரித்துவிட்டார்.

கூட்டத்தின் போது ராகுல், “காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை” என்று பேசியிருக்கிறார். உடனே நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். உடனே, “என் சகோதரியை இதற்குள் இழுக்க வேண்டாம்” என்று ராகுல் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

முந்நா முன்னாள் மத்திய அமைச்சர் ஶ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து நீங்கினால் கட்சியில் ஒழுக்கம் இருக்காது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தும் ராகுல் காந்தி தலைவராக தொடர்ந்து இருப்பார் என்று கூறியுள்ளார்.  

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 

சுதந்திரக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை, நேரு-காந்தி குடும்பம்தான் பெரும்பான்மை சமயங்களில் வழிநடத்தி வருகிறது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு இந்த குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரியிடம் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமை பொறுப்புக்குக் கீழ் காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை தலைவராக பொறுப்பேற்க வைத்தனர். 

scroll

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here