முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது மேலும் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

2006ஆம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்காக அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் கூறப்பட்டது. 

அதாவது வெளிநாட்டு நிறுவனம் 3 ஆயிரத்து ‌500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நிய முதலீடு ஊக்குவிப்புவாரியம் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது. 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் பணமோசடி நடைபெற்று இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிந்தது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இருபுலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே இவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில்,அவர்கள் இருவரும்  ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஏர்இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதேபோல் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கும், சிதம்பரம் மற்றும் காரத்தி சிதம்பரம் தம்பதி மீது வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காத வழக்கும் நிலுவையில் இருக்கின்றன. இவை தவிர ப.சிதம்பரம் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here