காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், ”காவிரி நதிநீர் உரிமையில் மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்துத் துரோகம் விளைவித்திருக்கையில் தமிழகம் அதற்கான உரிமை மீட்புப் போராட்டங்களில் களமிறங்கிக் கொந்தளித்துக் கிடக்கையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது தமிழர்களின் உணர்வை உரசிப் பார்ப்பதற்கு ஒப்பானது எனக் கண்டனம் தெரிவித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கிற சென்னை, சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுகிற அறவழிப்போராட்டத்தை அறிவித்து, எங்களது கூட்டமைப்பு சார்பாக அதனை முன்னெடுத்தோம். அதில் எவரும் எதிர்பாராதவிதமாக சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நிகழ்ந்தது ஒரு துன்பியல் சம்பவமாகும்.

அவ்வகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடித் தாக்குதல் நடத்தியதும், ஒருசிலக் காவல்துறையினர் தாக்கப்பட்டதுமான நிகழ்வுகள் மிகுந்த மனவலியைத் தரும் சம்பவங்களாகும். காவல்துறையினர் தாக்கப்பட்டது திட்டமிடப்படாத எதிர்வினைத் தாக்குதல்கள்தான் என்றாலும் அச்சம்பவத்திற்கு உளப்பூர்வமான மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.

நாம் தமிழர் கட்சியினர் என்றைக்கும் வன்முறைப்பாதையை விரும்பியதுமில்லை; அத்தகையப் போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டு பின்பற்றியதுமில்லை. நாம் தமிழர் கட்சியின் 8 ஆண்டுகாலப் போராட்ட வரலாறே அதற்குச் சாட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் போராட்ட வழிமுறைகளை பிறக் கட்சியினருக்கு முன்னுதாரணமாய் காட்டி காவல்துறையினரே பாராட்டுகிற அளவுக்கு மிகுந்தக் கட்டுக்கோப்போடும், ஒழுங்கோடுமே போராட்டங்களங்களில் நின்றிருக்கிறோம். சனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு மிகக் கண்ணியமாகவும், மிகுந்தப் பொறுப்புணர்வோடுமே போராட்டங்களை வழிநடத்திச் சென்றிருக்கிறோம்.

அப்படியிருக்கையில் எதிர்பாராத விதமாய் நடந்தேறிய அசம்பாவிதங்களுக்கு நாம் தமிழர் கட்சியைப் பொறுப்பாக்கி எமது கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்ச்சியாக நள்ளிரவில் கைதுசெய்வதும், விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயர்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றுவரை விடுவிக்கப்படாததும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. நாம் தமிழர் கட்சியினர் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்லர்; மாண்புமிக்க சனநாயகத்தின் மீதும், அறவழிப் போராட்டங்களின் மீது மட்டுமே நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்ட அறநெறியாளர்கள; பொறுப்பணர்வு கொண்ட சமூக நோக்கர்கள். பெருத்த சனநாயக ஆற்றலாய் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிற சூழலில் எங்கள் கட்சியினர் மீது மேற்கொள்ளப்படும் இவ்வகை கைது நடவடிக்கைகள் யாவும் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். வழக்குகளையும், சிறையினையும் கண்டு நானும், எனது தம்பிகளும் ஒருபோதும் அஞ்சியதில்லை. அவைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சட்டப்படியே மீண்டு வருகிறோம்.

ஆனால், அதற்காக எமது கட்சியினர் மீது போலியான வழக்குகள் புனையப்படுவதையும், தேவையற்று சிறைப்படுத்தப்படுவதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பிய மனிதநேய சனநாயகக் கட்சியின் தலைவர் தம்பி தமீமுன் அன்சாரி நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு, அக்கட்சி உறவுகளும் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள், போராட்டங்களில் பங்கேற்கவே செய்யாத அண்ணன் மன்சூர் அலிகான் என்னைக் கைதுசெய்யும் முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்தார் என்பதற்காகவே சிறைபடுத்தப்பட்டதும் அவசியமற்றது.

எனவே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், காவிரி உரிமை மீட்புப்போராளிகளையும் பொய்யான வழக்குகளில் நள்ளிரவில் கைதுசெய்வதை தமிழகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், போலி வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: முடியலை… ரொம்ப டயர்டாயிட்டேன்… அரவிந்த்சாமியின் புலம்பல் எதற்காக?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here