போராட்டக்காரர்களைப் போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் இந்த சூழலில், இளைஞர்களைத் திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த்தும், சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம் என்றும், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் நல்லது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

protest2

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சென்னை அண்ணா சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், மே17 இயக்கம், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

protest3

சேப்பாக்கம் மைதானம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்களை, திருவல்லிக்கேணி டி-1 காவல்நிலையம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரைத் தாக்கினர். இது தொடர்பான வீடியோவொன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான் என்றும், காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.

protest1

அவரின் பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் எனக் கூறும் நடிகர் ரஜினிகாந்த், திரைப்படக் கலைஞர்கள் மீதும், போராட்டக்காரர்கள் மீதும் தடியடி நடத்தி போலீசாரின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here