போராடியவர்களுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது; பிச்சை கேட்டவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தது – கங்கனா குறித்து காங்கிரஸ்

0
318

2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என நடிகை கங்கனா ரணாவத் கூறியது தேச துரோகம். அவருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

மத்தியஅரசு சார்பில், சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அதில் இந்திப்பட நடிகை கங்கனா ரணாவத்துக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா, ”பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014 இல்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947-ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான்” என்று கூறியிருந்தார்.

 இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக எம்.பி. வருண் காந்தி, ‘கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்த வீடியோ வைரலானது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘1947-ல் தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற நிர்ப்பந்திக் கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்ஸால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை. அரை நூற்றாண்டு காலம் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கங்கனா ரணாவத் அவர்களில் ஒருவர். 2014-ல் உண்மையில் நமது நாட்டின் அடிமைத்தனம் திரும்பியது. இது தான் பாஜக அளித்துள்ள சுதந்திரம்.” என காட்டமாக விமர்சித்திருந்தார். வீர சாவர்க்கரின் கருணை மனுக்களை ஆங்கிலேயர்களுக்குக் குறிப்பிட்டு, தைரியமாகப் போராடியவர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றனர். மன்னிப்பு பிச்சை கேட்டவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது .

சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய மகிளா காங்கிரஸ் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. “நாட்டின் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அக்கறை இல்லாத ஒருவர், பத்மஸ்ரீ போன்ற புகழ்பெற்ற விருதை பெற தகுதியற்றவர்” என்று மகிளா காங்கிரஸ் தலைவர் நெட்டா டிசோசா எழுதியுள்ளார். 

கங்கனா ரனாவத்தின் கருத்துக்கு பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று  மவுனத்தை கலைத்து நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். “இல்லையென்றால், அத்தகையவர்கள் மீது அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.  

இந்த நிலையில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கங்கனா கூறிய கருத்து, தேச விரோதமானது, என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் 124A இன் கீழ் இந்த புகார் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here