எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமான விபத்துக்குப் பின், ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை முடிவு செய்துள்ளது.

எத்தியோப்பியாவில் கடந்த 10 ஆம் தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியதில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இந்த இரு விமான விபத்துக்களும் விமானங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் நடந்துள்ளது.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பிறகு பறக்க அனுமதி கிடையாது என்று விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் அதன் டிவிட்டர் பதிவில், ஏப்போதும் பயணிகள் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக உலகம் முழுவதும் உள்ள விமானங்கள் மற்றும் விமான உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளவோம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உரிய பாதுகாப்பு மாற்றங்கள் செய்யும் வரை தடை விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here