போபி சினேட்சிங்கர்: வாழ்தல் இனிது

போபி சினேட்சிங்கர் 8000 பறவைகளை உலகிற்கு அறிமுகம் செய்தார்.

0
244
போபி ஸ்னெட்சிங்கரின் இளம் வயதுப் படம்.

போபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால் உண்டு. என்னலாம் ஆசை இருக்கோ பண்ணி முடிச்சிடுங்க மேடம்.’ என்று சுரத்தே இல்லாமல் மருத்துவர் முணுமுணுத்தார். ஐம்பது வயசெல்லாம் சாகிற வயசா என்று போபிக்கு ஆயாசமாக இருந்தது.
லியோ பர்னெட் எனும் விளம்பரப் பட வித்தகரின் மகளாகப் பிறந்தார் போபி. ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைகள் விரிந்தன. கல்லூரி முடிப்பதற்குள் திருமணம் நடந்து முடிந்திருந்தது. நான்கு பிள்ளைகள், அப்பாவின் எக்கச்சக்க சொத்து என்று வாழ்க்கை தன்போக்கில் அவரை இழுத்துக் கொண்டு போனது. இந்த வாழ்க்கையை விட்டு ஓடிவிடலாமா என்று தன்னுடைய மனக்கொதிப்பை கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் என்று மருத்துவர்கள் உதட்டை பிதுக்கிய நிலையில் போபி கண்ணீர் வடிக்கவில்லை. தன்னுடைய தோழியின் உந்துதலால் ‘பறவை நோக்கல்’ எனும் ஆர்வம் கொஞ்சமாகத் தொற்றிக்கொண்டு இருந்தது. முதன்முதலில் blackburnian warble எனும் கருங்குருவியை ஓயாத தேடலுக்குப் பிறகு கண்ட பொழுது அவரின் கண்கள் விரிந்தன. பறவைகள் உலகினில் பாடித் திரிய வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு வாழ்க்கை விதித்த ‘மரணத் தண்டனை’யின் மூலம் அதிகமானது.

ஒரு பைனாகுலர், தொலைநோக்கி, புகைப்படக்கருவி ஆகியவற்றோடு பயணம் போய்ப் பல்வேறு பறவைகளைக் கண்டறிவது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. வாழ்க்கையின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் அதைச் சாகசமாக மாற்றிக்கொண்டார். மனதில் இதுதான் வாழ்க்கையின் இறுதிக்கணம் என்கிற வேகம் இருக்கிறது. செலவுக்கு அப்பாவின் பணம் இருக்கிறது. போதாதா?

போபி ஸ்னெட்சிங்கர் எடுத்த பறவைப் படங்களில் ஒன்று.
போபி ஸ்னெட்சிங்கர் எடுத்த பறவைப் படங்களில் ஒன்று.

உற்சாகமாகச் சுற்றிச்சுழன்றார் போபி. கவலைகள் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த பறவைகளைக் கவனிப்பது, திடீரென்று அரிய பறவையைக் காண்பது ஆகியவை வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருந்த அவரின் வாழ்க்கையில் புது உற்சாகத்தைத் தந்தன. ஆறு மாதங்கள் அலாஸ்காவில் சுற்றி பறவைகளை நோக்கிவிட்டு மருத்துவரிடம் போனால் புற்றுநோய் மட்டுப்பட்டு இருக்கிறது என்று புருவம் உயர்த்தினார்கள்.

ஐம்பது வயதில் துவங்கிய அந்தச் சாகசம் அடுத்தப் பதினெட்டு ஆண்டுகள் நீண்டது. எதுவும் அவரை அசைத்துப்போடவில்லை. பல சமயங்களில் உடல் முழுக்க அடிபடும். பல்வேறு கண்டங்களில், ஆபத்தான நிலப்பகுதிகளில் தைரியமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். பல்வேறு உள்ளூர் நோய்கள் வேறு தாக்கின. மலேரியா சுரம் கண்டு படுத்த காலங்கள் உண்டு. கைகளை உடைத்துக்கொண்டும் அசராமல் பயணத்தைத் தொடர்ந்த கதைகள் உண்டு. மொத்தமாக ஒரு கை முடமாகிப் போன பொழுது கூட அவரின் தேடல் நின்றதே இல்லை.

பப்புவா நியூ கினியா நாட்டில் உப்பங்கழியில் நின்று கொண்டு பறவைகளை நோக்கிக்கொண்டு இருந்தவரை கடுமையாகத் தாக்கி ஐந்து பேர் வன்புணர்வு செய்தார்கள். தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிய போபி மீண்டும் அதே இடத்துக்கு வந்து தான் விட்டுப்போன பணியை முடித்தார். உலகம் முழுக்கச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பறவை இனங்களை நோக்கி பதிவு செய்தார்.

சோதனைகள் தொடரவே செய்தன. எத்தியோப்பியாவில் அவரைக் கடத்திக் கொண்டு போன சம்பவம் ஒன்று நடந்தது. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்று பறவையைப் போலச் சுற்றி திரிந்ததில் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ‘கூண்டில் அடைய விரும்பாத பறவை’ எனத் தன்னுடைய மகளை மெச்சிய அவரின் அம்மா புரிந்து கொண்டிருந்திருப்பார். ஆசைமகளின் திருமணத்திலும் இருக்க முடியாத அளவுக்குத் தேடல் தொடர்ந்தது. ‘புதுசா இன்னொரு பறவையைப் பார்த்தாச்சு’ என்று அழகாக விரல் தூக்கி அப்பொழுதும் சிரிப்பார் போபி.

மடகஸ்காரில் ஒரு வேனில் பறவைகளைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தார். வேன் விபத்துக்கு ஆளாகி, நொறுங்கி சம்பவ இடத்திலேயே போபி இறந்து போனார்.சாவதற்கு முன்னால் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டு இருந்த Red shouldered Vanga எனும் அரிய பறவையைக் கண்டிருந்தார். மரணத்தின் வாசலில் இருந்து எது சாகசத்தின் கதவுகளைத் திறந்ததோ அதே பறவை நோக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவரின் வாழ்க்கை முடிந்தது எத்தனை மகத்தான முடிவு?

இதையும் படியுங்கள்: காந்தியைப் பற்றி ஏழு அவதூறுகள்

போபி ஸ்னெட்சிங்கர் எடுத்த Horned Guan பறவையின் படம்.
போபி ஸ்னெட்சிங்கர் எடுத்த Horned Guan பறவையின் படம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்